யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்

0
183
Article Top Ad

யாழ்ப்பாணம் – மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட  பொருளாதார மத்தியநிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்தியநிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், மட்டுவில் நகருக்கு வருகை தந்த பிரதமர் யாழ் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்து நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.

சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்த விசேட பொருளாதார மத்தியநிலையத்திற்கு பதுளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் யாழ் சந்தையிலிருந்து அத்தியாவசிய மரக்கறிகள் மற்றும் பழங்கள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்தியநிலையத்தை திறந்து வைத்த பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்  அங்கு உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு,

வணக்கம்,

உங்கள் அனைவரையும் சந்திப்பதில் சந்தோஷம் என தமிழில் உரையாற்றினார்.

யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன். 1970களில் யாழ்ப்பாணம் எப்படி இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது யாழ் மக்களுக்கும் கொழும்பு மக்களுக்கும் இடையே சிறந்த தொடர்பு இருந்தது. யாழ்ப்பாணத்தில் சிங்கள முதலாளிமார் இருந்தார்கள்.

இங்கிருந்த பெரும்பாலான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது கொழும்பில் இருந்தனர். இன்றும் அப்படித்தான். யாழ்ப்பாணத்திலிருந்து ரயிலிலே கொழும்பு வந்துசென்றனர்.

கொழும்பில் பணிபுரியும் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மாலை ரயிலில் ஏறி காலையில் யாழ்ப்பாணத்தை சென்றடைவர். அது ஒரு காலம். அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் எங்களுக்கு வெகு தொலைவில் இல்லை. மிக நெருக்கமாக உணர்ந்தோம்.

அந்த சகாப்தம் 1980க்குப் பின்னர் திடீரென மறைந்தது. யாழ்ப்பாணம் செல்லும் ரயில் பாதையை உடைத்தனர். தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் செல்ல வேண்டிய யாழ்தேவி நின்றது. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பண்பாட்டுப் பாலமாக யாழ்தேவியைப் பார்க்கிறேன்.

வடக்கு மக்கள் சுதந்திரத்தை இழக்க ஆரம்பித்தனர். வடக்கில் விவசாயி நெல் வயலுக்குச் செல்ல முடியவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. வடக்கு பதுங்கு குழியாக மாறியது.

சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் உரிமையை இழந்தனர். எந்த நேரத்திலும் தமது சொந்த வீடுகளைவிட்டு  வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது.

வடக்கில் உள்ள மக்கள் அகதிகளாக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆரம்ப காலத்தில் இந்தியாவிற்கும் சென்றனர். ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றனர். அவர்களுக்கு தாயகம் இருந்தாலும் அங்கு சுதந்திரமாக வாழமுடியாமல், தெரியாத பிரதேசங்களிலும், நாடுகளிலும் அகதிகளாக வாழ வேண்டியதாயிற்று.

30 ஆண்டுகளாக அந்த இருண்ட சகாப்தம் இருந்தது. அந்த இருண்ட காலத்தில் வடக்கு மக்களின் வாழ்வுரிமையும் அபிவிருத்தியும் பறிக்கப்பட்டன. மே 19, 2019 அன்று அந்த இருண்ட சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது. அதன் பின்னர் வடக்கு மக்கள் இழந்த உயிர்களை தவிர அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

யுத்தம் முடிவடையும் போது இன்று வடக்கில் உள்ள எதையும் அன்று காணமுடியவில்லை. சுட்டு வீழ்த்தப்பட்ட கட்டிடங்கள், உடைந்த சாலைகள், வீடற்ற மக்கள். ஆனால் ஓரிரு வருடங்களில் அனைத்தையும் திருப்பிக் கொடுத்தோம். சாலைகள் அமைக்கப்பட்டன, தண்ணீர் வழங்கப்பட்டன, நூறாயிரக்கணக்கான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன. மின்னல் வேகத்தில் மின்சாரம் கொடுக்கப்பட்டது என்று சொல்வதே சரியாக இருக்கும். பாடசாலைகள், மருத்துவமனைகள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கட்டப்பட்டன.

அன்று வடக்கு மக்கள் சாப்பிடுவதற்கும், பல் துலக்குவதற்கும் மட்டுமே வாய் திறக்கிறார்கள் என்ற கதை காணப்பட்டது. அந்த மக்களை நாம் விடுவித்தோம். பல ஆண்டுகள் கழித்து ரயில் பாதை அமைக்கப்பட்டது. வடக்கும் தெற்கும் யாழ் தேவியால் இணைக்கப்பட்டன. வடக்கில் மாகாண சபை மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டது.

ஆனால் அந்த சகாப்தத்திற்கு 2015 இல் இடையூறு ஏற்பட்டது. 2015இன் பின்னர் நாங்கள் நாங்கள் செய்த வேலைகள் இடைநிறுத்தப்பட்டன. நல்லிணக்கம் என்ற திட்டம் வந்தது.

அவசரகாலச் சட்டங்களை நீக்கி நாம் ஏற்படுத்திய மாகாண சபை நல்லாட்சியுடன் கலைக்கப்பட்டது. நல்லாட்சி காலத்தில் ஒரு வீதி அபிவிருத்தியோ அல்லது மின்சார திட்டமோ யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கவில்லை. நாட்டிற்கும் கிடைக்கவில்லை.

புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டிருந்தால் யாழ்ப்பாண மக்கள் இன்று இருளில் மூழ்கியிருக்க மாட்டார்கள்.

ஆனால் அந்த நல்லிணக்கத் திட்டத்திற்காக பில்லியன்கள் செலவிடப்பட்டன. சமாதானம் பற்றிய பாடலுக்கு பில்லியன்கள் செலவழிக்கப்பட்டன. யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு குடிநீர் குழாய் வழங்கப்படவில்லை.

நாங்கள் செய்து கொண்டிருந்த பணி 2015ல் நிறுத்தப்பட்டது. நாம் அதை மீண்டும் தொடங்க வேண்டும். 2019ஆம் ஆண்டு மீண்டும் இந்த நாட்டைக் கைப்பற்றிய போது, நல்லாட்சியின் மூலம் பின்னோக்கிச் சென்ற நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிட்டோம்.

ஆனால் திடீரென்று கொவிட் தொற்று ஏற்பட்டது. அந்த நேரத்தில் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் எமது மக்களைப் பாதுகாக்கவே விரும்பினோம். நாம் அதை செய்தோம்.

வடக்கு மக்களைப் போன்று தென்னிலங்கை மக்களையும் தொற்று நோயிலிருந்து பாதுகாக்க முடிந்தது.

உங்கள் மாகாணங்களில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளையும், மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளையும் ஆரம்பிப்போம் என உறுதியளிக்கின்றோம். உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன் என கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

தொடர்ந்து நாம் உங்களை மறக்கமாட்டோம். கைவிடமாட்டோம் என தமிழில் உரையாற்றினார்.

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, மாகாண பிரதம செயலாளர் சமன் தர்ஷன படிகோரள, யாழ்.மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் என்.உஷா மற்றும் பிரதேச மக்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.