சட்டவிரோத பண சேகரிப்பில் ஈடுபட்ட அதிபரும், அபிவிருத்தி சங்கமும்!

0
10
Article Top Ad

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்த அரசாங்கத்தின் சுற்றறிக்கைகளை அதிபர் ஒருவரும் பாடசாலை அபிவிருத்திக் குழுவும் புறக்கணித்துள்ளதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

நுவரெலியா மாவட்டம், வலப்பனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட சில்வர் கண்டி தமிழ் வித்தியாலயத்தில் பயிலும் ஒரு தொகுதி மாணவர்களுக்கு கௌரவிப்பு விழாவினை நடத்துவதற்கு பெருந்தொகை பணம் மாணவர்களிடமே அறவிடப்பட்டுள்ளது.

சில்வர்கண்டி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 11இல் பயிலும் 46 மாணவர்கள் மற்றும் கடந்த வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 13 மாணவர்கள் ஆகியோருக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நிகழ்விற்காக குறித்த மாணவர்களிடம் தலா 3,000 ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளது. இதற்கமைய 177,000 ரூபாய் பணம் மாணவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைவிட குறித்த நிகழ்வு இந்த மாதம் 11ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன் அன்றைய தினம், 6,7,8 ஆகிய தரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த நிகழ்விற்காக குறித்த தரங்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டுமென அதிபரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கி ஆரம்ப பிரிவு ஆசிரியர்களை பாடசாலைக்கு வருகைத் தருமாறு அதிபர் கட்டாயப்படுத்தியுள்ள போதிலும், இதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்திய ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை இந்த கௌரவிப்பு நிகழ்வில் பிரதேச அரசியல்வாதி ஒருவர் அதிதியாக பங்கேற்றமை குறித்தும் மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மாணவர்களை கௌரவிக்கும் பாடசாலை நிகழ்வில் பற்கேற்றமை ஏன் என மாணவர்களின் பெற்றோரும், சமூக செயற்பாட்டாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாடசாலை மாணவர்களிடம் பெருந்தொகை பணம் அறவிடப்பட்டமை மற்றும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கியமை தொடர்பில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் காஞ்ஞாதேவி கிருபாகர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலை நிகழ்வில் அரசியல்வாதி ஒருவர் பங்கேற்றமை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவர்களின் பிள்ளைகளிடம் இவ்வாறான “அவசியமற்ற” ஒரு விழாவிற்கு மிகப்பெரிய தொகை பணத்தை அறவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆசிரியர் வேலு இந்திரசெல்வன் தெரிவிக்கின்றார்.

பாடசாலை நிதி சேகரிப்புகள் தொடர்பில் சுற்றுநிருபங்கள் காணப்படுகின்றபோதிலும் பெருந்தோடடப் பகுதிகளிலுள்ள பல பாடசாலைகளின் அபிவிருத்தி சங்கங்கள் அதனைப் பின்பற்றுவதில்லை எனவும் ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

பெரும்பாலான பாடாசலைகளின் அபிவிருத்தி சங்க நிர்வாக அதிகாரம் பணபலம் படைத்த வர்த்தகர்களின் கைகளில் காணப்படுவதால் அவர்கள் பண அறவீட்டு விடயத்தில் தன்னிச்சையாக தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் இதனால் வறிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் பெற்ற கடனுக்கான வட்டியை வங்கிகள் அதிகரித்தவுடன் அதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்திய ஆசிரியர்களும், அதிபர்களும் பெருந்தோட்ட மாணவர்களின் பொருளாதார நிலைமை தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டுமெனவும் ஆசிரியர் வே. இந்திரசெல்வன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.