சுதந்திரமடைந்து 75 வருடங்களாகியும் மக்களில் பலர் மூவேளை உணவிற்கே தடுமாறும் நிலைமைக்கு முழுமுதற்காரணமாக இனவாதக் கொள்கைகளே அமைந்தது என்றால் மறுதலிக்க முடியுமா?
மாறி மாறி பதவிக்கு வந்தவர்கள் எப்படி சிறுபான்மையினரான தமிழர்களை அடிமைப்படுத்தமுடியும் அடக்கியாளமுடியும் என்று ஆட்சியதிகாரங்களைப் பயன்படுத்தினார்களே அன்றி நாட்டில் ஐக்கியத்தை நிலைநிறுத்தி இலங்கையர் என்ற அடையாளத்தை முன்னிறுத்த தவறிவிட்டனர்.
முதலில் தமிழர்களைக் குறிவைத்தவர்கள் பிற்பட்ட காலங்களில் முஸ்லிம்கள் மீது தமது பார்வையைத் திருப்பி அவர்களது பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டு ஏற்பட்ட பொறாமையால் அவர்கள் மீது பார்வையைத்திருப்பிக்கொண்டனர்.
இப்படியே இந்த இருஇனங்களையும் அடக்கியாள நினைத்ததன் விளைவு இன்று தமிழர்களிலும் முஸ்லிம்களிலும் கணிசமானமோர் ஏன் பெரும்பான்மையானவர்கள் தம்மை இலங்கையர் என்று அடையாளப்படுத்தக்கூட விரும்புவதில்லை.
எமது அயல்நாடான இந்தியாவில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் இந்தியர் என்று கூறுவதில் பெருமைகொள்கின்றனர். ஆனால் இங்கோ இலங்கையர் என்று கூறி பெருமைகொள்ளும் நிலையில் மக்கள் இல்லை.
இலங்கையின் இன்றைய நிலைக்கு அரசியல் வாதிகளை மட்டும் குறை கூறுவது பொருத்தமானதல்ல . அண்மையில் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக்கூடாது என தமது இனவாதத்தை கக்கிய பௌத்த உயர் பீடங்களைச் சேர்ந்த பிக்குகள் எங்கிருந்து இந்த இனவாதம் தோற்றம் பெறுகின்றது என்பதை சந்தேகத்திற்கிடமின்றி வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த பௌத்த பீடங்களைச் சேர்ந்தவர்கள் தம்மைச் சந்திக்கவரும் விருந்தினர்களை தம்மைவிட சிறிய கதிரையில் அமர்த்தி தம்மைவிடக் கீழானவர்கள் என்று உணர்த்தும் மனநிலைகொண்டவர்கள். சிங்கள பௌத்தவர்களையே அப்படி நடத்துபவர்கள் சிறுபான்மையினர் அதிகாரம் கிடைத்து சம உரிமையுடன் கௌரவமாக வாழ்வதை விரும்புவார்களா?
அரசியல்வாதிகளும் மதப்பிரமுகர்களும் ஏனைய இனமத வெறியர்களும் தொடர்ச்சியாக சிறுபான்மையினர்களைக் குறிவைத்து அடக்கியாள நினைத்ததன் விளைவும் இன்று சர்வதேசத்தின் முன்னிலையில் நன்மதிப்பைத்தொலைத்து நிற்கவேண்டிய நிலைக்கு இலங்கையைத் தள்ளிவிட்டுள்ளது.
இலங்கைக்குள் சிங்களமக்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும் அவர்களது பொதுவான மனநிலையோ ‘சிறுபான்மை மனநிலையிலேயே இருக்கின்றதை அவர்களது கருத்துக்களை செவிமடுக்கும்போதும் அளவளாவும் போதும் உணர்ந்துகொள்ளமுடிகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சிங்கள மக்கள் majority community with a minority mindset என்று என்னுடனான நேர்காணல்களில் கூறியுள்ளார்.எப்போதும் யாரேனும் தம்மை ஆக்கிரமித்துவிடப்போகின்றனர் தமது நாட்டைப் பறித்துவிடப்போகின்றனர் என்ற எண்ணம் அவர்களிடம் அதிகம்.
நாம் எமது எதிர்காலத்தை அச்சங்களின் மீது கட்டியெழுப்பிட முடியாது மாறாக நம்பிக்கையில் கட்டியெழுப்பினாலேயே அது நின்று நிலைக்கும்.ஆனால் இலங்கையில் சிங்கள மக்களில் அனேகர் வெளிநாடுகளிடம் பிச்சையெடுத்து வாழ்ந்தாலும் பரவாயில்லை தமிழர்களுக்கு அதிகாரம் சென்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதனை அவர்களது கருத்துக்கள் உணர்த்துகின்றன.
பொருளாதாரத்தில் அடிமட்டத்திற்கு வந்துள்ள இந்த வேளையிலாது தமது இனவாதத்தை களைந்து சிங்கள தலைவர்களும் பௌத்த மத பிக்குகளும் அதிகாரப் பகிர்விற்கு முன்வராதிருப்பது வெறுமனே சிறுபான்மையினரின் எதிர்காலத்தை மட்டும் பாதிக்கின்ற விடயமல்ல.
பெரும்பான்மை சிங்கள மக்களும் இதில் அதிகமாக பாதிக்கப்படப்போகின்றனர் என்பதற்கான சமிக்ஞைகளை கடந்தாண்டு எமது கண்முன் காட்டியது. சோமாலியா சென்றாலும் பரவாயில்லை வாழ்க்கைக்கு இந்த நாடு சரிப்பட்டுவராது என்ற பாணியில் பல லட்சம் மக்கள் இலங்கையை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றமை மீளவும் சான்றுபகர்கின்றது.
அதிகாரத்தைப் பகிர்ந்து அனைவரும் சமமான மனிதர்கள் என்று மதித்து வாய்ப்புக்களையும் வளத்தையும் பாராபட்சமின்றி வழங்கினால் இந்த நாடு இன்னமும் ஓரிரு தசாப்தங்களில் சுபீட்ஸமான பாதைக்குத் திரும்பும் . ஆனால் 75 ஆண்டுகளாக திருந்தாத இந்த ஜென்மங்கள் இனியும் திருந்துமா? இப்படியே போனால் கடவுள்களால் கூட இலங்கையைக் காப்பாற்ற முடியாது போகலாம்.
ஆக்கம் அருண் ஆரோக்கியநாதர்.