ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் அதிரடி தொடருமா? 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்

0
26
Article Top Ad

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

நாக்பூர் போட்டியை போலவே இந்த டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்வின்- ரவீந்திர ஜடேஜாவின் மந்திர சுழற்பந்தில் ஆஸ்திரேலியா நிலை குலைந்தது. இந்த கூட்டணி மொத்தம் உள்ள 20 விக்கெட்டில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இந்திய சுழற்பந்து வீரர்களுக்கு ஏற்ற ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொண்டது.

வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

கேப்டன் ரோகித் சர்மா நாக்பூர் டெஸ்டில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அவர் 120 ரன்கள் குவித்து அணி வலுவான நிலையை அடைய காரணமாக திகழ்ந்தார். இதே போல ஜடேஜாவும், அக்ஷர் படேலும் ரன்களை குவித்தனர்.

தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் டெஸ்டில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் டெல்லி டெஸ்டில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்று தெரிகிறது. ஒருவேளை ஸ்ரேயாஸ் அய்யர் உடல் தகுதி பெற்றால் சூர்யகுமார் யாதவ் நீக்கப்படுவார்.

முதல் டெஸ்டில் 3 நாளிலே தோல்வியை தழுவியதால் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடும் நெருக்கடியில் உள்ளது.

அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். லபுஷேன் மட்டுமே இந்திய பந்து வீச்சை சற்று சமாளித்தார். வேகப்பந்து வீரர் ஸ்டார்க் இந்த டெஸ்டில் ஆடுவது இன்னும் உறுதியாகவில்லை.

அந்த அணியின் புதுமுக வீரர் மர்பி முதல் டெஸ்டில் அபாரமாக பந்து வீசினார். 7 விக்கெட் சாய்த்து முத்திரை பதித்தார். இரு அணிகளும் நாளை மோதுவது 104-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 103 போட்டியில் இந்தியா 31-ல், ஆஸ்திரேலியா 43-ல் வெற்றி பெற்றன. 28 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. ஒரு போட்டி ‘டை’யில் முடிந்தது. நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.