இலங்கையிடமிருந்து IMFஐக் காப்பாற்றுக!

0
23
Article Top Ad

 

வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக சர்வதேச நாணயநிதியத்திடம் (IMF )இருந்து கடனுதவியைப் பெறுவதற்கு தேவையான அனைத்து நிபந்தனைகளையும் தாம் பூர்த்திசெய்துவிட்டதாகவும் அடுத்துவரும் சில வாரங்களில் IMF அதன் பொறுப்பை நிறைவேற்றும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.அவரது உரையை ஆழமாக நோக்கினால் தாம் தான் இலங்கையின் மீட்பர் வீழ்ந்துகிடந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்த இரட்சகர் என்ற தோரணையில் இருக்கும்.

1950ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 29ம் திகதி IMF உடன் இணைந்தது. 1965ஜுன் மாதம் முதற்கொண்டு இம்முறை உடன் சேர்ந்து 17 தடவை IMF கடனுதவியை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.பொருளாதாரம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் முன் சென்று பல்வேறு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் தேவையான பொருளாதார சீர்திருத்தங்களையும் மேற்கொள்வதாகவும் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அடுத்த தேர்தல்களில் வெல்வதற்காக வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றியதே இலங்கையின் அரசியல் வாதிகள் கடந்த 16 தடவைகளும் செய்த சாதனையாகும்.

முன்னர் போன்று அன்றி இம்முறை வங்குரோத்துக்குள்ளான நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிக்காக விண்ணப்பித்து பல்வேறு தடங்கல்களின் பின்னர் அந்தக்கடனுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டத்தில் நிற்கும் இலங்கையின் அரசியல் வாதிகள் இம்முறையேனும் நாட்டை மீண்டும் மீண்டும் கையேந்தும் நிலைக்குத்தள்ளும் நிலையை மாற்றும் வகையிலான பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பார்களா? அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதைக் குறிக்கோளாக் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகள் நிறைந்த இந்த நாட்டில் பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கு எங்கு இடமுண்டு? 17வது தடவையாகவும் IMF ஏமாற்றப்படும் என்பதற்கே வாய்ப்புண்டு என்பதே வரலாறு உணர்த்தும் பாடமாகும்.