திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் நேற்று புத்தர் சிலை பிரதிஷ்டை செய்ய முற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
குறித்த இடத்தில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு பௌத்த பிக்குகள் முயற்சித்த நிலையில் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு கட்டுமானவேலை மற்றும் புத்தர் சிலை பிரதிஷ்டையினை நிறுத்துமாறு பொலிஸாரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. இதன்போது பிக்குகளுக்கும் பொலிஸாருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.
அத்தோடு, குறித்த பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. எனினும், குறித்த சிலை இன்று காலை மீளவும் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில் இவ்விடயம் இன்று பேசுபொருளாக மாறியுள்ளது. அத்தோடு, சமூக ஊடகங்களிலும் இது தொடர்பாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் விளக்கம்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் பேசும்போது, பாதுகாப்பு கருதியே சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது என்றும், தேவையற்ற வன்முறையை தடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்ததாகவும் கூறினார்.
சிலை விரைவில் மீண்டும் நிறுவப்படும் என்றும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். எனினும், இந்த விளக்கம் அனைவரையும் திருப்திப்படுத்தவில்லை. சிலர் இதை அரசின் பலவீனமாக கருதுவதோடு, பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தும் செயற்பாடாக உள்ளதென விமர்சிக்கின்றனர்.
இந்த சம்பவம் திருகோணமலையில் வாழும் பல இன, பல மத மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான சிங்கள மக்கள் மற்றும் பிக்குகள், சிலை அகற்றப்படுதல் அவர்களின் மத பாரம்பரியத்துக்கு எதிரானது என கருதுகின்றனர். அதே நேரத்தில், சில சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கடலோரப் பாதுகாப்புத் திணைக்கள விதிகளுக்கு முரணாகவே சிலை பதிக்கப்பட்டிருந்தது என்பதால் சட்ட நடைமுறை தவறாமல் பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
சஜித்தின் கருத்தும் அதற்கான எதிர்ப்பும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதுகுறித்து இன்று பாராளுமன்றில் தெரிவித்த கருத்து, குறிப்பாக தமிழ் மக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் அரசியலமைப்பின்படி, பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மிக நீண்ட கால வரலாற்றை கொண்ட திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையில் புத்தர் சிலையை வைக்க பொலிஸார் தடை விதிக்கின்றனர். யாரை கேட்டு அங்கு சிலை அகற்றப்பட்டது என கேள்வி எழுப்பினார்.
அத்தோடு, புத்தர் சிலை அகற்றப்பட்ட விடயம் தேசிய பிரச்சினை என்றும், அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளவாறு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் சஜித் கூறினார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப செயற்பட வேண்டும் என்றும் சஜித் பாராளுமன்றில் கூறினார்.
குறிப்பாக கடந்த தேர்தலில் தமிழ் கட்சிகள் சஜித்திற்கு ஆதரவாக செயற்பட்ட நிலையில், அவரும் பெரும்பான்மை சமூகத்திற்கு மற்றும் பௌத்தத்திற்கு ஆதரவான ஒருவரே, ஆகவே அவருக்கு ஆதரவளித்த கட்சிகள் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று மக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
பதவி விலக கோருகிறார் சுமந்திரன்
திருகோணமலை சம்பவம் தொடர்பாக, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் தமது முகப்புத்தகத்தில் இவ்வாறு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

“அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் தேசிய மக்கள் சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது. நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிசாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது. தே. ம. ச. அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது. இக் கட்சியைச் சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
ஆனால், அந்த பதிவிற்கு கீழ் வழமைக்கு மாறாக மக்கள் விமர்சனங்களையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக கடந்த தேர்தலில் சஜித்திற்கு ஆதரவாக செயற்பட்டுள்ளீர்கள். அவரும் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்கு என்ன கூறப்போகின்றீர்கள் என கேள்வியெழுப்பியுள்ளனர்.
எதிரணியினரின் சதியா?
கொழும்பில் எதிர்வரும் 21ஆம் திகதி அரச எதிர்ப்பு போராட்டமொன்றுக்கு தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னணியிலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்ற கருத்துக்களும் பரவலாக காணப்படுகின்றன. அதாவது இவ்வாறான செயலை தூண்டிவிட்டு, அதன்மூலம் அரச எதிர்ப்பிற்கு தூபமிட்டு, தமது பேரணிக்கு ஆதரவு திரட்ட எதிரணியினர் மேற்கொண்டுள்ள திட்டமிட்ட சதி என்ற கருத்தாடல்களும் மேலோங்கியுள்ளன.
மொத்தத்தில், திருகோணமலை புத்தர் சிலை சம்பவம், நாட்டின் இன, மத, அரசியல் உறவுகள் எவ்வளவு நுணுக்கமாகவும் தீப்பொறி போன்ற பதட்டத்துடனும் இயங்குகின்றன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. பல மதங்கள், பல இனங்கள் மிக அருகருகே வாழும் இந்த தேசத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க வேண்டுமெனில் மிகுந்த பொறுப்பும் மரியாதையும் அவசியம். மதச் சின்னங்களைப் பாதுகாப்பதும் சட்டத்தை மதிப்பதும் ஆகிய இரண்டும் சமநிலைப்படுத்தப்பட்ட முறையில் கையாளப்பட வேண்டும். இல்லையெனில் ஒரு சிறிய நடவடிக்கையே பெரிய சமூகப் பிரச்சினையாக மாறக்கூடும். சமூக அமைதியும், மக்களிடையேயான பரஸ்பர மரியாதையும், உணர்வுகளை கவனமாக கையாளும் அரசியல் முதிர்ச்சியும் இவ்வாறான சூழ்நிலைகளில் மிகவும் முக்கியமானவை என்பதை இந்தச் சம்பவம் வலியுறுத்துகிறது.
செய்தியாக்கம் – கே.கே.

