யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்

0
381
Article Top Ad

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Jaffna International trade fair 2022) இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் – முற்றவெளியில் இன்று ஆரம்பமான இந்தக் கண்காட்சி, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

12 ஆவது தடவையாக யாழ்ப்பாணததில் நடத்தப்படும் இந்த வர்த்தக கண்காட்சியில், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள் தங்கள் உற்பத்திகளை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான களமாக இது அமைந்துள்ளது.

விவசாயம், கல்வி, உணவு, தொழில் நடவடிக்கைகள், இயந்திரங்கள், கட்டுமானம், நுகர்வோர், மின்னியல் மற்றும் பல சேவைகளைக் கொண்டதாக இது அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய முதலாவது நாளில் கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் என அதிகளவானோர் வருகை தந்ததாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த வர்த்தகக் கண்காட்சிக்கு யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து, எல்.ஈ.சி.எஸ் (LECS) நிறுவனம் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதுடன், சர்வதேச வர்த்தக மன்றம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன.

கண்காட்சியைப் பார்வையிடச் செல்வோர் மாலை 6 மணிக்கு முன்னர் சென்றால் அனைத்து காட்சியறைகளையும் பார்வையிடலாம் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.