நான் ஆட்சிக்கு வந்ததும் முதலாவதாக முன்னெடுக்கும் பணியானது, அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு சலுகை பெற்றுக்கொடுப்பதாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய ஊழியர் சங்கத்தின் முதலாவது நிறைவாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
‘பூலோக ரீதியாக பாகங்களாகப் பிரித்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அபிவிருத்தியின் பிரதிபலன் நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் சரிசமமாகப் பகிரப்பட வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தினார்.
‘நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுப்பதன் காரணமாக ஒரு சிலர் என்னை விமர்சிக்கின்றனர். மக்களுக்குப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் அவர்கள் துக்கத்துடன் இருக்கின்றனர். அரசியல்வாதிகளும் பணம் படைத்தோர்களும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது தொடர்பில் எவரும் வாய்திறப்பதில்லை’ எனவும் அவர் கூறினார்.
‘முதலாளிமார்கள் பணம் படைத்தோர் பற்றி மாத்திரமின்றி சூறையாடலுக்கு உள்ளாகும் மக்கள் தொடர்பில் ஆராயும் எனது பொறுப்பை ஒருபோதும் கைவிடமாட்டேன்’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
‘பல வருடங்களாகப் பல துயரங்களுக்கு மத்தியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்ட பலர் உள்ளனர். நான் ஆட்சிக்கு வந்ததும் முதலாவதாக முன்னெடுக்கும் பணியானது அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு சலுகை பெற்றுக்கொடுப்பதாகும். 1994ஆம் ஆண்டு முதல் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்ட அனைவருக்கும் சலுகை வழங்கியே தீருவேன் என்றார்.