கொங்கொங்கில் தேடித் தேடி எலிகள் கொலை செய்யப்படுவதற்கான காரணம் என்ன?

0
337
Article Top Ad

கொரோனா அச்சம் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ள நிலையில் கொங்கொங் அரசு எடுத்துள்ள முடிவு அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் எந்தவொரு நாடும் கொரோனா பரவலில் இருந்து முழுமையாக மீளவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இருப்பினும் கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருவதால் அதை முழுவதுமாக ஒழிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளுக்குக் கூட இது பிரச்சினை தான்.

கொரோனா பரலைத் தடுக்க ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான திட்டங்களைப் பின்பற்றி வருகின்றது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கொரோனா உடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் தீவிர கொரோனா பாதிப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளை மட்டும் அந்த நாடுகள் எடுத்து வருகின்றன.

அதேநேரம் சீனா உள்ளிட்ட சில நாடுகள் பூச்சியம் கோவிட் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அதாவது ஒரு நபருக்கும் தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடாது என்பதே இவர்களின் திட்டம்.

ஆனால் இந்த கோவிட் தடுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பெரும் சவாலாகவே உள்ளது. மிக எளிதாகவும் வேகமாகவும் பரவும் கொரோனாவுக்கு எதிராக பூச்சியம் கொரோனா திட்டம் என்பது கிட்டத்தட்ட முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்தால் அந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இப்போது அப்படி தான் மனிதர்களைத் தாண்டி விலங்குகளும் இந்த கொடிய கொரோனாவுக்கு கொத்து கொத்தாகப் பலியாகத் தொடங்கியுள்ளன.

கடந்த ஜனவரி 18 ஆம் திகதி கொங்கொங்கில் உள்ள செல்லப் பிராணிகளுக்கான கடை ஒன்றில் 11 வெள்ளெலிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த வெள்ளெலிகள் டிசம்பர் மாத இறுதியில் நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

இதையடுத்து மறு உத்தரவு வரும் வரை வெள்ளெலிகள் இறக்குமதிக்கு கொங்கொங் அரசு முற்றிலுமாக தடை விதித்தது.

மேலும் டிசம்பர் 22 ஆம் திகதிக்குப் பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளெலிகளை வைத்திருக்கும் செல்லப் பிராணிகள் கடைகளுக்கும் வெள்ளெலிகளது உரிமையாளர்களுக்கும் உடனடியாக அவற்றை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு கொரோனா பரவும் வாய்ப்புகள் குறைவு என்ற போதிலும் கடந்த டிசம்பர் 22 ஆம் திகதிக்குப் பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து வெள்ளெலிகளையும் கொல்ல அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து கொங்கொங்கின் நகர பல்கலைக்கழகத்தில் உள்ள விலங்கு நல மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” வெள்ளெலிகளின் சுவாச பகுதிகளில் 3 முதல் 6 நாட்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கும். இருப்பினும், அவை மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்பு மிகக் குறைவு. எனவே வெள்ளெலி உரிமையாளர்கள் பீதி அடைய வேண்டாம், வெள்ளெலிகளைக் கைவிடவும் வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், டிசம்பர் 22 ஆம் திகதிக்குப் பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து வெள்ளெலிகளையும் கொல்லும் முடிவில் அந்நாட்டு அரசு உறுதியாக உள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,

பூச்சியம் கோவிட் திட்டம் என்பது கிட்டத்தட்ட அடையவே முடியாத ஒரு திட்டம் தான். இதனால் தான் சிங்கப்பூர், நியூசிலாந்து போன்ற நாடுகள் கூட தங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன.

ஆனால், சீன ஆளுகைக்கு உட்பட்ட தன்னாட்சி பிராந்தியமான கொங்கொங் பூச்சியம் கோவிட் திட்டத்தில் உறுதியாக உள்ளது. இதனால் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளெலிகள் கொல்லப்படும் எனக் கூறப்படுகிறது.