பயங்கரவாத சட்டத்தை முழுமையாக நீக்குங்கள் – கையெழுத்துப் போராட்டம் தொடங்கியது கூட்டமைப்பு

0
267
Article Top Ad

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக் கோரி பொதுமக்கள் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று முல்லைத்தீவில் ஆரம்பித்து வைத்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று வியாழக்கிழமை ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தினார் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்

இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மிக மோசமான சட்டமாக இருக்கின்றது. 6 மாத காலத்துக்கு தற்காலிக சட்டமாகக் கொண்டுவரப்பட்டது. 42 ஆண்டுகளாக இருக்கின்றது. விசேடமாக தமிழ் இளைஞர்களை நசுக்கி- ஒடுக்கி ஆள்கின்ற சட்டமாக சர்வதேச விழுமியங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளிச் செயற்படும் சட்டமாக அது இருக்கின்றது.

அது நீக்கப்படும் என்று இலங்கை அரசு தெளிவாக சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி கொடுத்துள்ளது. அவ்வாறு நீக்குவதற்கான முயற்சியும் சென்ற அரசாங்க காலத்தில் இடம்பெற்றுள்ளது. அது முழுமை பெறவில்லை. ஆனால், தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்துகின்றோம் என்று சொல்லி எந்தவித உப்புச்சப்பில்லாத ஒரு சீர்திருத்தமாக அறிவிக்கப்படுகின்ற ஒரு வர்த்தமானி பிரசுரம் வந்துள்ளது.

அது நடைமுறையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அமுலில் எந்தமாற்றத்தையும் செய்யப் போவதில்லை. ஆகவே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு விசேடமாக ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்றுவதற்கும் எதிர்வரும் 28 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கின்றது. அவர்களையும் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில் இது செய்யப்படுகின்றது. அவர்கள் எல்லாருக்கும் விளக்கமாக விடயங்களை அறிவித்துள்ளோம் – என்றார்.