உலகிலேயே அதிகளவில் தடுப்பூசி செலுத்தியிருத்தல், பரவலாகவும் மலிவான விலையிலும் பரிசோதனை செய்தல் ஆகியவற்றால், மாறிவரும் கொரோனா திரிபுகளுக்கு மத்தியில், பெருந்தொற்று விளைவுகளை தாங்கும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளது.
புளூம்பெர்க்கின் கோவிட் தொற்றைக் கையாளும் சிறந்த 53 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ளது. இந்த தரவரிசை, சுகாதார சேவையின் தரம், தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை மற்றும் நாட்டை மீண்டும் பயணத்திற்கு திறந்துவிடுதல் உள்ளிட்ட 12 காரணிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
குறைவான தொற்று எண்ணிக்கையுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தமது நாட்டுக்குள் பயணிகளை அனுமதிக்கிறது. பெருந்தொற்று காரணமாக அதன் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான டுபாய், ஓர் உலகளாவிய சுற்றுலா மையமாக இருந்து, முதலீட்டுக்கான நகரமாகியுள்ளது.
“ஒருவருகொருக்கொருவர் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என்கிறார், மிர்சாம் சாக்லேட் நிறுவனத்தின் முதன்மை சாக்லேட் அதிகாரியும், இந்நகரத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வருபவருமான கேத்தி ஜான்ஸ்டன்.
“உள்ளூரை சேர்ந்த யோசனைகள் மற்றும் திட்டங்களை அதன் நம்பகத்தன்மை காரணமாக மக்கள் ஆதரிக்கின்றனர். இதுசார்ந்த செயற்பாடுகள் கொஞ்சம் மெதுவாகவும், மிகவும் கவனத்துடனும் நிகழ்கின்றன. இப்போது இங்கே இருப்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட வித்தியாசமான கிரகத்தில் இருப்பதாக உணர்கிறேன், அதனை நான் விரும்புகிறேன்” என்றார்.
டுபாய்க்கு ஏன் இப்போது செல்ல வேண்டும்?
முதலாவதாக, தற்போது சிறப்பான வானிலை நிலவுகிறது என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். “கொடுமையான, தாங்க முடியாத வெயில் இருக்காது என்பதால், ஒக்டோபர் முதல் மே வரை இங்கு வருவது சிறந்தது,” என டுபாயில் வசித்துவரும் டலா முகமது தெரிவித்தார்.
அந்த சமயத்தில்தான், வெளிப்புற நிகழ்ச்சிகள் மற்றும் நகரிலுள்ள ஏராளமான கடற்கரையோரங்களில் மேற்கூரை அமைக்கப்பட்ட பகுதிகள், உள்முற்றங்களில் நேரம் செலவழிப்பது அதிகளவில் இருக்கும்.
மேலும், டுபாயில் 2020 எக்ஸ்போ, மார்ச் 2022 இறுதிவரை நடைபெறுகிறது, இது சர்வதேச அளவிலான தனித்துவமான கண்டுபிடிப்புகள் மற்றும் எதிர்கால திட்டங்களை காட்சிப்படுத்தும் அரங்குகளைக் கொண்ட, 6 மாதங்கள் நடைபெறும் கண்காட்சியாகும்.
“இந்தக் கண்காட்சியை தவறவிடாதீர்கள், நிச்சயம் தவறவிடாதீர்கள்,” என்கிறார் ஜான்ஸ்டன். “அதில் நீங்கள் ஒருவாரம் முழுவதும் செலவழியுங்கள். ஜப்பானின் சூஷி உணவுக்காக மூன்று மணிநேரம் வரிசையில் காத்திருங்கள். பேரான் உணவகத்தில் பேரீச்சை புட்டிங்கை டக்காவுடன் ருசியுங்கள். அவுஸ்திரேலிய கண்காட்சி அரங்கில் நட்சத்திரங்களுக்குக் கீழே கனவு காணுங்கள்,” என்கிறார்.
முன் தயாரிப்புடன் பயணியுங்கள்
சூரிய மின்சக்தி, நீர் சேமிப்பு, பசுமை கட்டடம் மற்றும் உள்கட்டுமானம் ஆகியவற்றில் முதன்மையாக முதலீடு செய்து கடந்த தசாப்தத்தில் விடாமுயற்சியுடன் செயற்பட்டதன் காரணமாக அதிக தன்னிறைவு அடைந்திருக்கிறது.
ஆற்றலை உருவாக்கும்போது நிழலை வழங்கும் சோலார் மரங்கள், 9,000 தாவரங்கள் மற்றும் மூலிகைகள் அடங்கிய பண்ணை போன்ற திட்டங்களைக் காட்சிப்படுத்தும் அரங்கும் எக்ஸ்போ 2020-ல் அமைக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்று எதிர்பாராத விதமாக, உள்ளூர் பொருட்கள் மற்றும் சமையல்கலை நிபுணர்களிடையே ஒரு வளர்ச்சியை உருவாக்கியது, கடந்த இரு ஆண்டுகளில் இத்தகைய உணவு சார்ந்த தொழில்கள் உருவாகியுள்ளதாக ஜான்ஸ்டன் தெரிவித்தார்.
அரேபிய தாக்கத்துடன் கூடிய ஆர்பாலி ப்ரோ, உயர்தர இரவு உணவு மற்றும் காலை உணவுக்காக டிரெஸிண்ட் ஸ்டுடியோ, தி பார்ன் காபி பார், இனிப்பு கிழங்கு பேன்கேக்குகளுக்காக ஹப்பி ஆகியவை அவரின் விருப்பமான உணவகங்களாக உள்ளன.
ஜப்பானிய தாக்கத்துடன் உள்ளூர் தயாரிப்புகளுடன் கலந்து தனித்துவமான உணவுகளுக்காக ஈடன் ஹவுஸ் மற்றும் அதன் ஓமகேஸ் மெனுவையும் முகமது பரிந்துரைக்கிறார். “உதாரணமாக, ராஸ் அல் கைமாவில் (அமீரக துபாயிலிருந்து வடகிழக்கில் 100 கி.மீ. தொலைவில் உள்ளது) விற்கப்படும் ஸ்பெயின் உணவு தேனுடன் கூடிய சுட்டோரோ ஓர் உதாரணம்,” என்கிறார். 8 இருக்கைகள் மட்டுமே அங்கு இருப்பதால், எப்போதும் முழுவதும் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதால், மிகவும் முன்னதாகவே பதிவு செய்ய வேண்டும்.
ஓவேஷன் பயணக்குழுவின் பயண ஆலோசகரான துபாயில் வசிக்கும் விபா தவான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீன் பண்ணையிலிருந்து சால்மன், உள்ளூர் ஒட்டக பால்பொருட்கள் விற்பனையகத்திலிருந்து பெற்ற பால் உள்ளிட்ட உள்ளூர் பொருட்களை உபயோகிக்கும் போகா உணவகத்தைப் பரிந்துரைக்கிறார்; சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் துபாயில் அமைக்கப்பட்ட முதல் கஃபேக்களுள் ஒன்றான மற்றும் அவகாடோ விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்ட்ராக்களை உபயோகிக்கும், மற்றும் மறு உபயோகத்திற்கு ஏற்ற கப்களை கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கும் ‘தி சம் ஆப் அஸ்’ கபேயையும் பரிந்துரைக்கிறார்.
துபாயில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலைப்புத்தன்மைக்கான முயற்சிகளை இன்னும் ஆழமாக அறிய, நாட்டின் பெரிய தனியார் இயற்கைவழி பண்ணையான எமிரேட்ஸ் பயோ பார்ம்-ஐ (Solar bio farm) பார்க்க பரிந்துரைக்கிறார் தவான். “அங்கு குழுப் பயணம் மற்றும் சூரிய அஸ்தமனம் வரையிலான அமர்வுக்கு முன்பதிவு செய்யுங்கள்,” என்கிறார். “அங்கு சுற்றியுள்ள நிலத்தை விரிவாக இதன்மூலம் பார்வையிட முடியும். மேலும், உங்களின் சொந்த காய்கறிகளை அறுவடை செய்யும் வாய்ப்பையும் வழங்குகிறது. மேலும், வருடந்தோறும் தற்காலிக உணவக (பாப்-அப்) அனுபவத்தையும் இங்கும் வழங்குகின்றனர்” என்றார்.
இங்கு இயற்கையான பாலைவனத்தை அனுபவிக்க, அல் மஹா ரிசார்ட் மற்றும் ஸ்பாவை பரிந்துரைக்கிறார். துபாயின் முதல் தேசிய பூங்காவில் அமைந்துள்ள இந்த பைவ்-ஸ்டார் ரிசார்ட்டானது, பாலைவனத்தின் தனித்த சூழலியலையும் அங்கு வாழும் அரேபிய ஓரிக்ஸ் விலங்குகளையும் பாதுகாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ளது. 300 ஓரிக்ஸ் விலங்குகள், பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முயற்சிகளுக்குப் பின் தற்போது சுதந்திரமாக அங்கு திரிகிறது. அங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகள், நடைபயணமாகவும், 4*4 சபாரி வாகனங்கள், ஒட்டகங்கள் மற்றும் குதிரைகள் மூலமாகவும், வனவிலங்கு சுற்றுப்பயணங்களை வழங்குகின்றனர்.
நகரின் மையப்பகுதியில் ஓர் அனுபவத்திற்காக டிசம்பர் 2021-ல் திறக்கப்பட்ட, அரபுமொழியில் கதை சொல்லும் ‘ஹகாவதி’ கருப்பொருளில், பார்வையாளர்களை மூழ்கடித்து, நாட்டின் பாரம்பரியங்களைக் கொண்டாடுகிறது, புதிய 25 மணிநேர ஒன் சென்ட்ரல் உணவகம். 5,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட வட்ட வடிவ ‘பவுண்டெயின் ஆப் டேல்ஸ்’ நூலகத்துடன் இந்த அனுபவம் தொடங்குகிறது. உள்ளூர் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், பெடூயினால் ஈர்க்கப்பட்ட கலை மற்றும் அலங்காரத்துடன் இது தொடர்கிறது. இது, பண்டைய மற்றும் நவீன நாடோடிகளுக்கு சமர்ப்பணம் செய்யும் விதத்தில் அமைந்துள்ளது.
செல்லும் முன் அறிந்துகொள்ளுங்கள்
ஒமிக்ரான் திரிபு பரவலால் கட்டுப்பாடுகள் தொடர்ந்து மாறிவருகின்றன. எனவே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் பயணம் தொடர்பான வலைதளத்துக்கு சென்று சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் தேவையானவற்றை அறிந்துகொள்ளுங்கள்.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு இங்கு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் இங்கு செல்வதற்கு முன் கொரோனா ரேபிட் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், அங்கு செல்வதற்கு 72 மணிநேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்றை வழங்க வேண்டும்.
சில ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்கள் மற்றும் அதன் வழியாக பயணிப்பவர்களுக்கான பயணம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் ஐக்கிய அரபு எமிரேட்சின் தொற்று பரவல் கண்காணிப்பு மற்றும் உடல்நலன் தொடர்பான, அதிகாரப்பூர்வ Al Hosn செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இச்செயலி, நிறங்கள் அடிப்படையில் பரிசோதனை முடிவுகள் மற்றும் தடுப்பூசி நிலையை பிரதிபலிக்க வண்ண குறியிடப்பட்ட (சாம்பல், சிவப்பு, பச்சை) அமைப்பைப் பயன்படுத்துகிறது. துபாய் சுகாதார ஆணையம், ஆன்றாய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல்போன்களில் பயன்படுத்தும் வகையில் DXB ஸ்மார்ட் செயலியை வழங்குகிறது.
இது, ஐக்கிய அரபு எமிரேட்சின் தற்போதைய கொரோனா விகிதம், சோதனை முடிவுகளைக் கண்காணிக்கிறது மற்றும் எமிரேட்ஸில் தடுப்பூசி நிலை ஆகிய தகவல்களை பயணிகளுக்கு வழங்குகிறது.