2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இதன் ஆரம்ப நிகழ்வில் இந்திய தடகள வீரரான ஆரிஃப் கான் ஒற்றை இந்தியராக தேசியக் கொடியை ஏந்திச்சென்றார். இவர் மட்டுமே இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற இந்தியர் ஆவார்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று சீன தலைநகர் பீஜிங்கில் ஆரம்பமாகியுள்ளது. குளிர்கால ஒலிம்பிக்கில் மொத்தம் 15 பிரிவுகளில் மொத்தம் 109 பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளது. பெப்ரவரி 20 ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதற்காக பீஜிங், யாங்கிங் (Yanqing), ஜாங்சியாகவ் (Zhangjiakou) ஆகிய 3 இடங்களில் மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் BIRDS NEST மைதானத்தில் ஆரம்ப விழா சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக, சீனாவில் உய்குர் இஸ்லாமியர்கள் மீதான மனித உரிமை மீறலை சுட்டிக்காட்டி, குளிர்கால ஒலிம்பிக்கின் ஆரம்ப விழா மற்றும் நிறைவு விழாவில் அமெரிக்கா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். அதேபோல், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் ஈடுபட்ட இராணுவத் தளபதியை ஒலிம்பிக்கில் ஜோதி தீத்தை தீபமேந்துபவராக நியமித்ததைக் கண்டித்து இந்தியா சார்பிலும் அரச பிரதிநிதிகள் ஆரம்ப மற்றும் நிறைவு விழா நிகழ்வுகளைப் புறக்கணிப்பு செய்துள்ளனர்.
எனினும் இந்தியா சார்பில் குளிர்கால ஒலிம்பிக்கில் விளையாட காஷ்மீரைச் சேர்ந்த முகமது ஆரிஃப் கான் மட்டுமே தகுதி பெற்றுள்ளார். இவர் ஆல்பைன் ஸ்கீயிங் ஸ்லலோம் மற்றும் ஜெயிண்ட் ஸ்லாலோம் (alpine skiing slalom and the giant slalom) எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் ஐகானிக் பேர்ட்ஸ் நெஸ்ட் ஸ்டேடியத்தில் இடம்பெற்ற ஆரம்ப விழா அணிவகுப்பில் ஆரிஃப் கான் இந்திய தேசியக்கொடியை ஏந்திச் சென்றார். சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்த ஆரிப் கான் தனது பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சூழ இந்தியக் கொடியை தனியாளாக ஏந்திச் சென்றார்.
பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக ஆரிப் கானை தனது வலைத்தள பக்கம் மூலமாக வெகுவாக பாராட்டினார்.