இந்தியாவுக்கு வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இலங்கை தனது 74 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியதன் பின்னணியில், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் இந்திய விஜயம் இடம்பெறுகின்றது.
வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் இரு நாள் இந்திய விஜயம் பெரிதும் ஜெனிவாவில் 49 ஆவது மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரை குறிவைத்ததாகவே இடம்பெறவுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையால் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக கொண்டு வரப்பட்ட 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட தவறியுள்ளமை குறித்து சர்வதேச சமூகம் அதிருப்தி கொண்டுள்ளது.
இது சம்பந்தமாக அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான ஐ.நா.ஸ்தாபன பிரதிநிதி ஹனா சிங்கர் கூட தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 47 நாடுகளுக்கு கடிதங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.
எனவே, ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மார்ச் 3ஆம் திகதி இலங்கை குறித்த அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது. பிரித்தானியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தனித் தனியே இலங்கை குறித்த வாய்மூல விளக்கங்களை முன்வைக்கவுள்ளன.
இந்தத் தடவை ஜெனிவாவில் இலங்கை குறித்த பிரிட்டன், அமெரிக்கா, கனடா ஆகியவற்றின் பார்வை இலங்கை மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தை நிறைவேற்ற தவறியுள்ளதை மையப்படுத்தியதாக இருக்கலாம். இருந்தபோதிலும் மனித உரிமைகள் பலவற்றை புறக்கணித்துள்ள சீனாவுடனான உறவுகளை இலங்கை இறுக்கமாகக் கொண்டிருப்பதன் காரணமாக அதன் பின்னணியை மையப்படுத்திய நிலையிலும் கனடா, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவை தமது வாய்மூலமான அறிக்கையை முன்வைக்க முடியும் எனவும் எதிர்பார்க்க முடிகின்றது.
இது விடயத்தில் சீனா இலங்கையில் அகலக்கால் பதித்துள்ளமை குறித்து அதிருப்தியடைந்துள்ள இந்தியா, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தனது நலன்களை முன்நிறுத்தியதாகவும் தனது நேச நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகியவற்றின் எதிர்பார்ப்புகளுக்கே நிச்சயம் முன்னுரிமை வழங்கும் என்றே எதிர்பார்க்க முடியும்.
இதன் காரணமாகவே மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி இலங்கை குறித்து முன்வைக்கப்படவுள்ள எழுத்து மூலமான அறிக்கை மற்றும் வாய்மூல அறிக்கை என்பவை குறித்து இந்தியா தரப்பிலிருந்து எழுக்கூடிய அழுத்தங்களை குறைக்கும் வகையிலேயே வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையை பொறுத்தவரை இந்தியாவுடனான உறவு என்றுமில்லாதவாறு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கின்றது. இராஜதந்திர ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் இந்தியாவை இலங்கை தற்போது சார்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு – கிழக்கில் மனித உரிமைகள் மீறல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நீதிக்காக ஏங்கி நிற்கும் மக்கள் தொடர்பாகவும், இந்தியாவின் அனுசரணையோடு கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கம் குறித்தும் இந்தியா நிறையவே பங்களிப்பை வழங்க முடியும்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுகின்ற விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பு இன்றியமையாதது மட்டுமல்ல. நேடியாகவே தனது இராஜதந்திர நகர்வுகள் மூலம் செயல்பட வேண்டியதாகவும் இருக்கின்றது. ஏனெனில், இலங்கையில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கத்துக்காக இந்தியா நிறையவே விலை கொடுத்துள்ளது.
இத்தகைய பின்னணியில் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கொண்டுள்ள தற்போதைய இந்திய விஜயத்தின்போது தனது நலன் சார்ந்த விடயங்கள் ஒருபுறமிருக்க இலங்கையின் 13ஆவது திருத்தச்சட்டம் அமுலாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை கவனத்தில் கொண்டதாகவும், இலங்கையில் தீர்க்கப்படாதிருக்கின்ற மனிதாபிமானப் பிரச்னைகள் குறித்தும் வெளியுறவு அமைச்சர் போராசிரியர் ஜீ.எல்.பீரிஸை இந்தியா அணுக வேண்டியதே அவசியமானதாகின்றது.