முல்லைத்தீவு – குருந்தூர்மலை விகாரைக்கு வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, மருந்தாக்கல் மற்றும் விநியோகம் ஒழுங்குறுத்துகை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் இரவு வேளையில் திடீர் விஜயம் மேற்கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், சி.சிறீதரன் ஆகியோர் நாட்டின் 74 ஆவது சுதந்திர தினமான வெள்ளிக்கிழமை சென்றிருந்தனர்.
இந்த நிலையிலேயே மறுநாள் இரவு அமைச்சர்கள் இருவரும் குருந்தூர் மலைக்குச் சென்றனர்.
இதன்போது, முன்னர் தமிழ் குடியிருப்புகளாக இருந்து சிங்களக் குடியேற்ற திட்டங்களாக மாற்றப்பட்ட மணலாறு, அரிசிமலை, ஹெப்பிட்டிக்கொலாவ பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட பிக்குகளுடன் அமைச்சர்கள் பிரித் ஓதும் நிகழ்வில் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு முதல் நள்ளிரவு வரை பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் கோட்டாபய கடற்படை முகாமில் தங்கிவிட்டு நேற்றுக் காலை கொழும்பு புறப்பட்டனர் என்றும் அறிய வருகின்றது.