ஐ.நா ஆணையாளரின் அறிக்கை இலங்கைக்குச் சவால் அல்ல – பீரிஸ் நம்பிக்கை

0
370
Article Top Ad

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை இலங்கைக்குச் சவாலாக அமையாது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இம்மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இம்முறை இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் முன்வைக்கவுள்ளார். அந்த அறிக்கை மிகவும் காட்டமாக இருக்கும் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கையைப் பார்த்த பின்னரே அது தொடர்பில் எம்மால் பதிலளிக்க முடியும். எனினும், அந்த அறிக்கை இலங்கைக்குச் சவாலாக அமையாது என்றே நாம் நம்புகின்றோம்.

இந்த அறிக்கை எமக்குப் புதிய விடயம் அல்ல. அறிக்கைகள் அல்லது தீர்மானங்கள் மூலமாக இலங்கையைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் இலங்கை வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகின்றது.

சர்வதேசத்தைப் பகைக்க நாம் விரும்பவில்லை. சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட நாம் தயாராகவே இருக்கின்றோம்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை வெளிவந்த பின்னர் இலங்கையின் நிலைப்பாட்டை மாநாட்டில் வைத்து அறிவிப்போம்” – என்றார்.