உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலைப் போன்று பொருளாதார நெருக்கடியிலும் அரசியல் செய்ய வேண்டாம்

0
303
Article Top Ad

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை வைத்து அரசியல் செய்ததைப் போன்று நாட்டின் பொருளாதார நிலைமைகளை வைத்தும் அரசியல் செய்ய வேண்டாம் என அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி நிலைமையில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளோம் எனவும், பயங்கரவாதத் தடை சட்டமானது வடக்கு, கிழக்கு மக்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் பாதிப்பு என்பதை இன்று மக்கள் உணர்ந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும்போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“என்னால் இரகசியக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன என்று இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது தெரிவித்திருந்தார். ஆனால், அன்றைய கூட்டம் நடத்தப்பட ஒரு மணித்தியாலத்துக்கு முன்னரும் உங்களுடன் நான் உரையாடி உங்களையும் அந்தக்  கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன்.

ஆனால், நீங்கள் அதில் கலந்துகொள்ளவில்லை. அன்றைய கூட்டத்துக்கு அரசில் சில உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். குறிப்பாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண கலந்துகொண்டதுடன், அன்றைய கூட்டத்தின் அறிக்கையிலும் கையெழுத்திட்டிருந்தார். மேலும் இரு அரச  தரப்பு உறுப்பினர்களும் அந்தக் கூட்டத்தில் பங்குபற்றினர். மூடிய அறையில்  நடத்தப்படும் கூட்டம் இரகசியக் கூட்டமாகாது.

அதேபோல், இன்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக நாம் முன்னெடுக்கும் போராட்டத்தையும் வேறு உட்கருத்துக்கள் இருக்கும் என்று விமர்சிக்கின்றீர்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீள்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கருத்து எழுந்த வேளையில் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் குழுக்கூட்டங்களில் கலந்துகொண்டு இதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் கூறியுள்ளனர்.

அதற்கான பதிவுகள் உள்ளன. எனினும், அப்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் மீள் திருத்தம் செய்யப்படும் வேளையில் அது வேறு காரணிகளில் தாக்கத்தை செலுத்தும் என வேறு தரப்பினர் கூறினர். அவர்களின் கருத்துடன் நாம் இணங்கினோம். எனினும், பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக மீள் திருத்தம் செய்யப்படும் என்ற இணக்கத்துக்கும் நாம் வந்திருந்தோம்.

2018ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஆராயப்பட்டு அதில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள நாம் வலியுறுத்தினோம். பல முரண்பாடுகள், எதிர்மறையான கருத்துக்கள் அந்தச் சட்டமூலத்திலும் இருந்தன. அப்போது வெளிவிவகாரத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவிடம் உரையாடியபோது அதில் உள்ள முரண்பாடுகளைத் திருத்துவதாக அவர் எமக்கு வாக்குறுதியளித்தார். எனினும், 2018 ஒக்டோபர் மாதத்தில் அரசியல் சூழ்ச்சி செய்ததன் மூலமாகவும் ஸ்திரமற்ற அரசு ஆட்சியில் இருந்த காரணத்தினாலும், அதன் பின்னரான ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்தும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகள் நாகரிக சமூகத்தில் இடம் கொடுக்காது என்பதை ஏற்றுக்கொண்டு அதனை மீள் திருத்தம் செய்வதாக இணங்கி, சர்வதேச சமூகத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய மாற்றுவதாகும் இணக்கம் காணப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டமானது வடக்கு, கிழக்கு மக்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் பாதிப்பு என்பதை இன்று மக்கள் உணர்ந்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றபோது அது குறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வேளையில் 2019ஆம் ஆண்டில் அதன் இறுதி அறிக்கை வெளிவந்த நேரத்தில் அதில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, இந்தத் தாக்குதல் இடம்பெற்றதன் மூலமாக நாட்டு மக்கள் அனைவருமாக குரல் எழுப்பி ஓர் உறுதியான தலைவருக்கான கோரிக்கையை முன்வைக்கவா என்ற கேள்வி எழுந்தது.

தாக்குதல் நடத்தப்பட மூன்று கிழமைக்கு முதல் இருந்தே புலனாய்வுத்துறை அறிக்கை கிடைக்கப்பெற்றும், தாக்குதல் நடத்த ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டும், முதல்நாள் பிற்பகல் அறிவிக்கப்பட்டும் அதனைத் தடுக்க ஒரு நகர்வினையேனும் முன்னெடுக்கவில்லை. இந்தத் திட்டத்துக்கு ஏற்ப குறித்த எவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை.

நாட்டின் பொருளாதார நிலைமைகளுக்கு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கட்சி உறுப்பினர்கள் கூடிக் கலந்துரையாடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதனை சபைப்படுத்த விரும்புகின்றேன். அதேபோல் நாம் கூறும் விடயங்களை அரச ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நாம் வலியுறுத்தவில்லை. என்ன செய்திருக்க வேண்டும் என்பது சகலருக்கும் தெரிந்ததே.

நெருக்கடி நிலைமைகளில் நிதி அமைச்சர் கூறும் விடயங்கள் என்னவென்பதே தெளிவில்லாமல் உள்ளது. ஒரு சில நேர்காணல்களை அவதானித்தோம், அதில் அவர் கூறும் விடயங்களை நினைத்து வெட்கப்படுகின்றோம். மத்திய வங்கி ஆளுநர் கூறும் கருத்துக்களை முற்றிலும் மாறான கருத்துக்களை நிதி அமைச்சர் கூறுகின்றார். நிதி இராஜாங்க அமைச்சர் வேறு கருத்துக்களைக் கூறுகின்றார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி ஒட்டுமொத்த நாட்டையும் பாதித்துள்ளது. நாம் அனைவருமே ஒன்றிணைந்து இந்த நிலைமைக்களில் இருந்து மீள நினைகின்றோம். ஆகவே, ஈஸ்டர் தாக்குதலை வைத்து அரசியல் செய்ததைப் போன்று நாட்டின் பொருளாதார நிலைமைகளை வைத்தும்  அரசியல் செய்ய வேண்டாம் என அரசைக் கேட்டுக்கொள்கின்றோம், இந்த நெருக்கடி நிலைமையில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயராகவுள்ளோம்” – என்றார்.