அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் இன்று காலமானார்.
52 வயதான அவர் தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்த போது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷேன் வோர்ன் மரணம் அடைந்த செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் கூறி உள்ளார்.
ஷேன் வோர்ன் செப்டம்பர் 13, 1969 இல் அவுஸ்திரேலியா – விக்டோரியாவில் பிறந்தார். இவரின் தந்தை பிரிட்ஜெட் தாய் கெய்த் வோர்ன் வோர்ன் ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு (தரநிலை) வரை ஹாம்ப்டன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
பின் இவரின் விளையாட்டுப் புலமையினால் இவருக்கு மெண்டோன் கிராமர் பள்ளியில் இடம் கிடைத்தது. வோர்ன் தனது பள்ளிப் படிப்பின் இறுதி மூன்று ஆண்டுகளை மெண்டோன் பள்ளியில் கழித்தார்.
16 வயதிற்குட்பட்டோருக்கான டௌலிங் கேடயப் போட்டியில் மெல்பேர்ண் துடுப்பாட்ட சங்க பல்கலைக்கழக அணியை வழிநடத்தும் வாய்ப்பினை 1983, 1984 இல் பெற்றார்.
இவர் கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக பரவலாக அறியப்படுகிறார்.
1994 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக விஸ்டன் கிரிக்கெட்டர்களின் நாட்குறிப்பினில் குறிப்பிடப்பட்டார்.
மேலும் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் விஸ்டன் சர்வதேச முன்னணி துடுப்பாட்ட வீரராக ஷேன் வோர்னை விஸ்டன் கிரிக்கெட்டர்களின் நாட்குறிப்பு அறிவித்தது.
2000 இல் நூற்றாண்டின் சிறந்த ஐந்து விஸ்டன் கிரிக்கெட்டர்களின் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் இவர் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் விளக்கவுரையாளராகவும், தொழில்முறை சீட்டாட்ட வீரராகவும் இருந்தார். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 2013 ஜூலை மாதம் தனது ஓய்வினை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ஓய்வு பெறும் போது 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுக்களையும், 194 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.