உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி ஒலேனா ஸெலென்ஸ்கா – திரைக்குப் பின்னிருந்து முக்கிய பங்காற்றும் பெண்மணி

0
387
Article Top Ad

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பின்னர் ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலன்ஸ்கி நாட்டை விட்டு வெளியேறியதாக வந்த தகவலையடுத்து, அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “எனக்கு தேவை ஆயுதங்கள் தான். போக்குவரத்து அல்ல.” என்று நேரடியாக பதிலளித்தார்.

அவரது மனைவி ஒலேனா ஸெலன்ஸ்கா மற்றும் இரண்டு குழந்தைகள் சாஷா மற்றும் சிரில் ஆகியோரும் நாட்டிலேயே தங்கியிருக்க முடிவு செய்தனர்.

மேலும், தனக்குப் பிறகு தனது குடும்பமே ரஷ்யாவின் அடுத்த இலக்காக இருக்கும் எனவும் உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். இதையடுத்து அனைவரின் கவனமும் நாட்டின் முதல் பெண்மணியும் அதிபரின் மனைவியுமான ஒலேனாவின் பக்கம் திரும்பியது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் இருக்கும் இடம் வெளிப்படுத்தப்படவில்லை.

ஆனால் அவர், தனது செல்வாக்கினால், தான் வசிக்கும் இடத்திலிருந்தே நாட்டின் நலன் குறித்துச் சமூக ஊடகங்கள் வாயிலாகக் கருத்து தெரிவித்து வருகிறார் ஒலேனா.

கடந்த வாரம் அவர் வெளியிட்ட காணொளி ஒன்றில் “இன்று நான் அழவும் மாட்டேன், அஞ்சவும் மாட்டேன். நான் விவேகத்துடனும் நம்பிக்கையுடனும் இருப்பேன். என் குழந்தைகள் என்னைத் தான் சார்ந்திருக்கிறார்கள். நான் அவர்களுக்கும் என் கணவருக்கும் ஆதரவாக இருப்பேன். உங்களுக்கும் ஆதரவாக இருப்பேன்” என்று கூறியிருந்தார்.

அச்சமயம் அவர், ​உலகின் மற்ற நாடுகளின் முதல் பெண்மணிகளுக்குப் புதிய செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதை விளக்குகிறார். “இந்தச் சமயத்தில் உலகத் தலைவர்களின் மனைவிகள் உக்ரைனுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று கேட்கிறார்கள். அதற்கு எனது பதில்: உலகிற்கு உண்மையைச் சொல்லுங்கள் என்பதுதான். “

மனிதாபிமான உதவிகளை வழங்கக்கூடியவர்களுக்கான தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

44 வயதான உக்ரைனின் முதல் பெண்மணிக்கு இன்ஸ்டாகிராமில் 20 இலட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஆனால் அதனால் நாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டா?

ஒலேனா ஸெலன்ஸ்கா

படிப்பை விட்டு நகைச்சுவையாளர்

ஒலேனா ஸெலன்ஸ்கா க்ரீவிஹ் ரிஹ்-ல் வளர்ந்தார். இது மத்திய உக்ரைனில் உள்ள ஒரு நகரமாகும். அவரது கணவரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவரே.

இருவரும் கல்லூரி நாட்களில் இருந்து ஒருவரையொருவர் அறிந்திருக்கிறார்கள், அங்கு அவர் தனது கணவர் சட்டம் படிக்கும் போது இவர் கட்டடக்கலை படித்து வந்தார்.பின்னர் இருவரும் தங்கள் துறையை மாற்றிக்கொண்டு நகைச்சுவையாளர்களாக வலம் வரத் தொடங்கினர்.

அவர் தனது கணவரின் நிறுவனமான ஸ்டுடியோ குவார்ட்டல்95-இல் திரைக்கதைகளை எழுதி வந்தார். எட்டு வருடங்கள் ஒன்றாகப் பழகியவர்கள், கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஒரு வருடம் கழித்து அவர்களுக்கு முதல் பெண் குழந்தையும் 2013 ஆம் ஆண்டில், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தனர்.

இந்த நிலையில், ஸெலன்ஸ்கா அரசியல் ஆர்வமின்றித் தான் இருந்தார். ஆனால் 2019 இல், அவரது கணவர் 73% வாக்குகளுடன் வரலாற்று வெற்றியைப் பெற்று யுக்ரேனின் அதிபரானார்.

தேர்தலின் போது கணவருக்காக உருவாக்கிய சமூக வலைதளங்களே இதற்குக் காரணம் என்கிறார் ஸெலன்ஸ்கா.

அச்சமயத்தில் தனது மனைவி தனக்கு மிகுந்த ஆதரவளித்ததாக அதிபர் ஸெலன்ஸ்கியும் கூறுகிறார்.

திரைக்குப் பின்னால் இருந்து…

ஸெலன்ஸ்கா, தன்னை அதிகம் வெளியுலகிற்குக் காட்டிக்கொள்ளாமலே வாழ்ந்தாலும், இப்படி ஒரு நெருக்கடி காலத்தில், நாட்டின் குடிமக்களுக்கு உதவவும் ஊக்குவிக்கவும் சமூக வலைதள நெட்வொர்க்குகளின் உதவியை நாடுகிறார்.

இந்த குணாதிசயங்கள் காரணமாக, 2019 ஆம் ஆண்டில், ஃபோக்கஸ் பத்திரிகை அவரை மிகவும் செல்வாக்கு மிக்க100 யுக்ரேனியர்கள் பட்டியலில் சேர்த்தது. அச்சமயம், ​​2019 இல், முதல் பெண்மணியாகத் தனது நோக்கங்களைப் பற்றி கூறினார்.

அரசியல் வாழ்க்கையில் நுழைந்த பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அவர் கூறியிருந்தார்.

“ஊடகங்களுடன் தொடர்புகொள்வது மிகுந்த மன அழுத்தத்தை தரக்கூடியது என்று நான் கூற மாட்டேன். ஆனால் நான் திரைக்குப் பின்னால் இருப்பதையே விரும்புகிறேன். என் கணவர் எப்பொழுதும் முன்னால் இருக்கிறார், அவருடைய நிழலில் நான் சுகமாக உணர்கிறேன்” என்று அவர் கூறியிருந்தார்.

“நான் கட்சியில் அதிக ஈடுபாடு கொள்ளவில்லை. வம்பு பேசுவது எனக்குப் பிடிக்காது. அது என் குணத்தில் இல்லை. ஆனால் வெளிச்சத்தில் இருப்பதன் அவசியம் குறித்துச் சிந்தித்த போது, முக்கியமான சமூகப் பிரச்சினைகளில் மக்களின் கவனத்தை ஈர்ப்பது ஒரு காரணமாகத் தோன்றியது”

இவை அனைத்திற்கும் மத்தியில், குடும்ப வன்முறை மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் பாராலிம்பிக்ஸிற்கான ஆதரவு போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக போராடவும் அவர் முடிவு செய்தார்.