முக்கோண காதல் கதை; ‘ஹேய் சினாமிகா’ சினிமா விமர்சனம்

0
189
Article Top Ad

சதா நச்சரிக்கும் கணவரை பிரிய வேறொரு பெண்ணிடம் உதவி கேட்கிறார் மனைவி. பிரிவு சாத்தியமானதா இல்லை மீண்டும் அன்பே பேரன்பே என்றானதா என முக்கோண காதல் கதை ஒன்லைனில் வந்திருக்கிறது ஹே சினாமிகா.

நடன இயக்குனர் பிருந்தா டைரக்டு செய்துள்ள படம். துல்கர் சல்மானும் அதிதி ராவும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் சதா பேசிக்கொண்டும் பிறருக்கு அறிவுரை வழங்கி கொண்டும் இருக்கும் துல்கர் சல்மானின் குணாதிசயம் அதிதிராவுக்கு பிடிக்காமல் போகிறது. அவரிடம் இருந்து விலக முடிவு செய்து வெளியூர் செல்கிறார். அங்கும் துல்கர் சல்மான் வந்து விடுகிறார். எனவே ஆண்களையே பிடிக்காத மனநல ஆலோசகர் காஜல் அகர்வாலை அணுகி கணவரை தன்னிடம் இருந்து பிரிக்க உதவி கேட்கிறார். காஜலும் சம்மதிக்கிறார். துல்கர் சல்மானும் அதிதியும் பிரிந்தார்களா? என்பது மீதி கதை.
துல்கர் சல்மான் வெகுளியாகவும் புத்திகூர்மை உள்ளவராகவும் வந்து கவர்கிறார். மனைவிக்கு பிடிக்காத அவரது குணாதிசயமே மக்கள் கொண்டாடும் அளவுக்கு உயர்த்துவது ஈர்க்கிறது. மனைவிமேல் அதீத அன்பு வைப்பதும் பிறகு அவராலேயே உடைந்துபோய் கலங்குவதுமாய் கதாபாத்திரத்தை இன்னும் வலுவாக்கி இருக்கிறார். அதிதிராவ் இளைமை பொலிவோடு வசீகரிக்கிறார். கணவரிடம் இருந்து விலக வகுக்கும் வியூகங்கள் சுவாரஸ்யமானவை. பிரிய முடிவு எடுத்த பிறகு கணவரோடு காஜல் நெருக்கம் காட்டுவதை பார்த்து அதிதி ஆத்திரப்படுவது கதாபாத்திர வடிமைப்பை குழப்பமாக்குகிறது.
கிளைமாக்சில் அழுது உருக வைக்கிறார். காஜல் அகர்வால் வழக்கமான துறுதுறு நடிப்பால் கவர்கிறார். காதல் உணர்வுகளையும் உயிரோட்டமாக வெளிப்படுத்துகிறார். யோகி பாபு, விஜய், நட்சத்திரா ஆகியோரும் உள்ளனர். ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை போகபோக விறுவிறுப்புக்கு மாறுகிறது. திருமணமான இளம் தம்பதியின் காதல், நெருக்கம், பிரிவை மையப்படுத்தி உணர்வுப்பூர்மான திரைக்கதையில் காட்சிகளை இளமையாகவும் உயிரோட்டமாகவும் நகர்த்தி தேர்ந்த இயக்குனராக கவனம் பெறுகிறார் பிருந்தா. பிரித்தா ஜெயராமின் கேமரா காட்சிகளை அழகாக்கி இருக்கிறது. கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.