பிச்சை எடுக்கும் அரசுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம்? அனந்தி கேள்விக்கணை

0
147
Article Top Ad

“சர்வதேசத்திடம் பிச்சை எடுக்கும் அரசுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம் தேவை?”

– இவ்வாறு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றுமுன்தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய இந்த நிலைக்குக் காரணத்தைப் பார்த்தால் சரியான பொருளாதாரக் கொள்கை நாட்டில் இல்லை .

இதற்கு முன்னர் இவர்களுடைய திவிநெகும மோசடி தொடங்கி  கடந்தகால ஆட்சியாளர்களின் மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஆரம்பித்து கடந்தகால மோசடிகளால்தான் இதுவரை சரியான பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படாமல் இருக்கின்றது.

மத்திய வங்கியின் ஆளுநராக இருக்கின்ற அஜித் நிவாட் கப்ராலின் கடந்த காலங்கள் கூட மிகவும் மோசமாக இருக்கின்ற பக்கத்தில் அவரை மீண்டும் ஆளுநராகப் போட்டிருக்கின்றார்கள்.

வாரந்தோறும் பணங்களை அச்சடிக்கின்ற நிலைமையைப் பார்க்கின்றோம். இவையெல்லாம் நாட்டின் சரியான பொருளாதாரக் கொள்கைகளாக இல்லை. இலங்கை முற்றுமுழுதான கடனுக்குள் மூழ்கிப் போய்விட்டது .

2009இல் போர் முடிவடைந்து இன்று 13 வருடங்கள் ஆகியும் பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாத நிலையை இந்த 13 வருட கால ஆட்சியாளர்களும் பார்க்கவேண்டும்.

காரணம் இன்றி பெருமளவு பணம் பாதுகாப்புச் செலவுகளுக்காக ஒதுக்கப்படுகின்றது. மிகப்பெரிய ஒரு தாக்குதல் நடத்தப்போவதாக அல்லது ஒரு நாட்டை ஆக்கிரமிக்கப் போவதாக நினைத்துத்தான் குறித்த தொகை ஒதுக்கப்படுவதாகப் பார்க்கவேண்டியுள்ளது.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் வசதியாக வாழ்கின்றனர். அவர்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு, உணவுத் தட்டுப்பாடு எதுவுமில்லை.

இன்று இலங்கையில் என்ன வளம் இல்லை? எல்லா வளமும் உண்டு . ஆனால், நாடு ஏன் இவ்வாறு ஒரு அதலபாதாளப் பொருளாதார வீழ்ச்சிக்குப் போனது என்று காரணத்தைத் தேடினால் இவற்றுக்கு ஆட்சியாளர்களே முழுப் பொறுப்புக்கூற வேண்டும் .

இன்று இந்த நாட்டின் ஜனாதிபதி குறித்த பொறுப்பில் இருந்து விலகுவது போல் நான் ஒன்றும் செய்ய முடியாது எனக்  கூறுகின்றார். அப்படிக் கூறுபவராக இருந்தால் நீங்கள் ஏன் ஜனாதிபதியாக இருக்கின்றீர்கள்?

நாங்கள் இன விடுதலைக்காக – சுயநிர்ணயத்துக்காகப் போராடியபோது எல்லா நாடுகளின் உதவியுடனும் நாம் அழிக்கப்பட்டும். தமிழீழ விடுதலைப்புலிகளுடைய அந்தக் கட்டுப்பாட்டின் கீழ் நாம் வாழ்ந்த வாழ்வை சுய பொருளாதார நிலையில் தன்னிறைவு பொருளாதாரத்தை நாம் அடைந்து இருந்தோம் .

இன்று இலங்கை அரசு, போர் நடக்கும் ரஷ்யாவிடம் கூட பிச்சை எடுக்கின்ற நிலைமையில் காணப்படுகின்றது .

அன்று ஒவ்வொரு மக்களும் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது நாங்கள் விட்ட கண்ணீரும், அவர்கள் விட்ட ஏக்கமும் இன்று இலங்கையை ஒரு நட்டாற்றில் கொண்டு வந்துவிட்டு இருக்கின்றது. இந்த அழிவவுக்கு உடந்தையாக இருந்த அத்தனைபேரும் இதற்குப் பொறுப்பாளிகள் ஆகவேண்டும் .

இன்று இலங்கையினுடைய கடனை அடைப்பதற்கு இன்றைய ஆட்சியாளர்களின் சொத்துக்களை விற்றாலே போதும்.

வடக்கு, கிழக்கு மக்களுடைய இனப்பிரச்சினைகளை இவர்கள் தீர்ப்பார்களாக இருந்தால் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களே இவர்களுடைய கடனை ஈடுசெய்யக் கூடியதாக இருக்கும். ஒட்டுமொத்த தமிழர்களும் நினைத்தால் இந்த இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கான கடனைத் தீர்க்க கூடிய வழி உள்ளவர்களாக இருக்கின்றார்கள் .

ஆனால், எங்களை அழித்துவிட்டு எங்களுக்கான அரசியல் உரிமை மறுக்கப்பட்டு நாம் அடிமையாக இருக்கின்றோம். இவ்வாறான நிலையில் அன்று கண்ணீருடன் போராட்டங்களை முன்னெடுக்கின்ற நிலையை நாம் பார்க்கின்றோம்.

சாதாரண பொதுமக்கள் தெருவில் நின்று டீசல் பெற்றோலுக்கு வரிசையில் நிற்பது, உணவுப் பொருட்களுக்கு கடை கடையாக ஏறி இறங்குவதும் எல்லாமே மக்களை மிக மோசமான நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஐ.நாவில் தாங்கள் நல்லவர்கள் எனக் காட்டிக்கொண்டு இருக்கின்ற இந்த ஆட்சியாளர்கள் சர்வதேசத்திடம் பிச்சை எடுக்கின்றனர். இந்தப் பிச்சைக்காரர்களுக்கு ஆட்சி அதிகாரம் எதற்கு?

நாம் இந்தக் கொடிய போர்ச்சூழலில் வாழப் பழகிக்கொண்டவர்கள் . ஆனால், சிங்கள மக்கள் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர் .

ஒரு சில வாரங்களுக்குள்ளேயே இந்தச் சிங்கள மக்கள் தெரவுக்கு வந்திருக்கின்றார்கள் என்றால் நாங்கள் பல வருடங்களாக இந்தப் பொருளாதாரத் தடைகளுக்கு என்னவெல்லாம் கஷ்டப்பட்டு இருப்போம்.

எனவே, இந்த அரசு விதைத்ததை அறுவடை செய்கின்றது. ஏழை சிந்திய கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்று சொல்வார்கள். அதே வார்த்தையை இந்த இடத்தில் நினைவுகூருகின்றோம்.

இன்னும் ஒரு மோசமான நிலையை இவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்த ஆட்சி அதிகாரத்தை விட்டு ஒதுங்கும்  நிலை கடவுளால் வழங்கப்படும்” – என்றார்.