சுதந்திர போராட்ட பின்னணி – RRR சினிமா விமர்சனம்

0
278
Article Top Ad

1920-களில் வெள்ளையர்களை எதிர்த்து நின்ற அல்லூரி சீதாராம ராஜு, கொமாரம் பீம் இருவரின் பெயர்களையும், பின்னணியையும் மட்டும் எடுத்துக்கொண்டு, தேவையான அளவு கற்பனை சேர்த்து பிரமாண்டமான பொழுதுபோக்குப் படமாக மாற்றியிருக்கிறார் ராஜமௌலி.

பாகுபலி’ என்ற பிரமாண்ட படத்தின் இரண்டு பாகங்களை தந்து பிரமிக்க வைத்தவர், ராஜமவுலி. அவரின் இன்னொரு பிரமாண்டமான படைப்பு என்பதால், ‘ஆர் ஆர் ஆர்’க்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
இது, இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்து கதை. ஒரு மலை கிராமத்தில் கதை ஆரம்பிக்கிறது. அங்கு வசிக்கும் பழங்குடியை சேர்ந்த ஒரு சிறுமியை அடிமை வேலைகளை செய்வதற்காக ஆங்கிலேய துரை பலவந்தமாக தூக்கி செல்கிறார். அவரிடம் இருந்து சிறுமியை மீட்க பழங்குடி இனத்தை சேர்ந்த மாவீரன் பீம் புறப்படுகிறான்.
சுதந்திர போராட்ட வீரரான தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றுவதற்காக ஆங்கிலேயர்களின் காவல் படையில் சேர்ந்து அவர்களின் விசுவாசியைப்போல் நடந்து கொள்கிறான், இன்னொரு மாவீரன் ராம். பீமை பிடிக்கும் சிறப்பு காவல் படை அதிகாரியாக ராம் நியமிக்கப்படுகிறான்.
இருவரும் யார்? என்று தெரியாமலேயே நண்பர்கள் ஆகிறார்கள். ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் யார் – யார்? என்ற உண்மை அவர்களுக்கு தெரிய வருகிறது. பீமை பிடிக்க முயற்சிக்கிறான், ராம். நண்பர்கள், எதிரிகள் ஆகிறார்கள். இருவரும் ஒரே லட்சியத்துக்காக போராடுபவர்கள் என்ற உண்மை அவர்களுக்கு தெரியவரும்போது, என்ன நடக்கிறது? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.
ராமாக ராம்சரண், பீமாக ஜூனியர் என்.டி.ஆர். நடித்து இருக்கிறார்கள் என்பதை விட, வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இரண்டு பேருக்கும் சமமான கதாபாத்திரங்கள். ராம்சரண் துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரி. ஜூனியர் என்.டி.ஆர். வனவிலங்குகளுக்கு அஞ்சாத காட்டு ராஜா. போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள்.
இவர்களுக்கு ஜோடிகளாக வரும் அலியாபட், ஒலிவியா ஆகிய இருவருக்கும் அதிக வேலை இல்லை. அஜய்தேவ்கன் சுதந்திர போராட்ட வீரராக வருகிறார். சமுத்திரக்கனி 2 காட்சிகளில் தலை காட்டியிருக்கிறார்.
கதை சொன்ன விதத்திலும், அதை காட்சிப்படுத்திய விதத்திலும் டைரக்டர் ராஜமவுலி வியக்க வைக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு சரி போட்டி. படத்தின் நீளம் மிக அதிகம். 3 மணி 8 நிமிடங்கள் ஓடுகிறது.