கல்வி கொள்ளை – ‘செல்பி’ சினிமா விமர்சனம்

0
356
Article Top Ad

கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையின்போது நன்கொடை என்ற பெயரில் பெற்றோர்களிடம் கொள்ளையில் ஈடுபடுவதையும் அவர்களுக்கு இடைத்தரகர்களாகச் செயல்படும் இளைஞர்கள் குறித்தும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்தப் படம்.

மருத்துவ கல்லூரி உரிமையாளர்களையும், அவர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே உள்ள தரகர்களையும் பற்றிய கதை. ஜீ.வி.பிரகாஷ்குமாரும், அவருடைய நண்பர்களும் கல்லூரிகளில் இடம்பிடித்து கொடுக்கும் தரகர்கள். கல்லூரியின் உரிமையாளர் சங்கிலி முருகன். இவருக்கும், தரகர்களுக்கும் மத்தியில், சங்கிலி முருகனின் நம்பிக்கைக்குரிய ஆளாக கவுதம் வாசுதேவ் மேனன். கல்லூரி ‘சீட்’டுகளை அதிக தொகைக்கு விற்று கவுதம் வாசுதேவ் மேனன் கட்டு கட்டாக பணம் சம்பாதிக்கிறார். இந்த கருப்பு வியாபாரத்தில் தரகராக செயல்பட்டு ‘கமிஷன்’ பார்க்க முயற்சிக்கிறார்கள் ஜீ.வி.பிரகாசும், நண்பர்களும். ஒரு முரட்டு பணக்காரரிடம் ‘சீட்’ வாங்கி தருவதாக பேரம் பேசி, ரூ.65 லட்சம் வாங்குகிறார்கள்.
இந்நிலையில், போலீஸ் திடீர் சோதனை நடத்தி, சிலரை கைது செய்ய ஜீ.வி.பிரகாசும், நண்பர்களும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். நண்பர்களில் ஒருவரான குணாநிதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். ஜீ.வி.பிரகாஷ், கவுதம் வாசுதேவ் மேனனிடம் வேலைக்கு சேருகிறார். மறுபடியும் அவர் மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ பிடித்துக் கொடுக்கும் பழைய வேலையை தொடங்குகிறார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பது மீதி கதை.
ஜீ.வி.பிரகாஷ் தாடியும், மீசையுமாக பராமரிக்கப்படாத தலைமுடியுடன், ‘கனல்’ என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். என்ஜினீயரிங் மாணவரான அவர் மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ பிடித்துக் கொடுக்கும் தரகர் வேடத்தில், கச்சிதமாக பொருந்துகிறார். சண்டை காட்சிகளில், ‘ரிஸ்க்’ எடுத்து இருக்கிறார். அவர்மீது கதாநாயகி வர்சா பொல்லம்மாவுக்கு காதல் வருவதைத்தான் நம்பமுடியவில்லை. அதனால்தானோ என்னவோ, காதல் காட்சிகளை குறைத்து, கதையோட்டத்தில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். நண்பராக வரும் குணாநிதி, கல்லூரி உரிமையாளராக சங்கிலி முருகன், ஜீ.வி.பிரகாசின் அப்பாவாக வாகை சந்திரசேகர் ஆகியோர் கதாபாத்திரங்களாக மனதில் பதிகிறார்கள். வில்லனாக பதற வைக்கிறார், கவுதம் வாசுதேவ் மேனன்.
ஜீ.வி.பிரகாசின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் இரவில் நடப்பதால் ஒரு திகில் படத்துக்கே உரிய மிரட்டலுடன் காட்சிகளை பதிவு செய்து இருக்கிறார், ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி.
புதுசாக ஒரு கதைக்களத்தில், நிறைய கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு குழப்பம் இல்லாமல் வெகு நேர்த்தியாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் மதிமாறன். படத்தின் முதல் பாதி சுமாரான வேகத்துடன் கடந்து செல்கிறது. இரண்டாம் பாதி, சூப்பர் வேகம்.
இந்த கதைக்கும், ‘செல்பி’ என்ற டைட்டிலுக்கும் என்ன தொடர்பு?