நாட்டில் கோலோச்சும் திருட்டுக் குடும்ப ஆட்சியை விரட்டுவோம் – சஜித் சூளுரை

0
244
Article Top Ad

இன்று நம் நாட்டில் ஊழலும் திருட்டும் தலைதூக்கியுள்ள கொடூரமான அரசே ஆட்சியில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாட்டின் அரச சொத்துக்களை, அரச வளங்களைக் கொள்ளையடிக்கும் பலிகடாவாக ஆளும் குடும்பம் மாறியுள்ளது எனக் குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அத்தகைய நாடு ஓர் அங்குலம் கூட முன்னேறாது எனவும் சுட்டிக்காட்டினார்.

அம்பாறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு இந்தக் குடும்ப அரசே முழுப் பொறுப்பு. இவர்களால் கொள்ளையடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் மறைத்து வைக்கப்பட்ட பணம் அனைத்தும் மீட்கப்படுவது கண்டிப்பாக மேற்கொள்ளப்படும். அத்தகைய திருடர்களுக்குத் தண்டனை வழங்குவது துல்லியமாக நிறைவேற்றப்படும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிச்சயமாக மேற்கொள்ளப்படும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை மூலம் அரசையும் ஜனாதிபதியையும் தோற்கடிப்பதற்குத்  தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு மாத்திரம் நின்று விடாமல் இருபதாம் திருத்தம் மாற்றப்பட்டு, பத்தொன்பதாவது திருத்தத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த நாட்டில் போராடும் அனைத்து மக்களின் பெயராலும் அதற்கு உத்தரவாதம் அளிக்கின்றோம்.

அவர்களின் கோரிக்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளுடன் முழு உடன்பாடு கொண்டவை. அவர்களின் குரலாக ஐக்கிய மக்கள் சக்தி நடைமுறை ரீதியாக நிலை கொள்ளும். அதேபோல் கட்சி சார்பற்ற போராட்டத்துக்கு எமது முழு ஆதரவும் இருக்கும்.

ஜனாதிபதி தலைமையிலான கேவலமான ஆட்சியை இந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான ஜனநாயகப்போராட்டம் இடைவிடாது தொடரும்.

நாட்டுக்கு ஜனநாயக ரீதியான வெற்றிகளைப் பெற்றுக்கொடுப்பதில் நாம் உறுதியாக அர்ப்பணிப்புச் செய்கின்றோம்.

நாடு முழுவதும் வரிசைகளுக்கு மேல் வரிசைகள் இருந்தாலும், விமானங்களைக் கொள்வனவு செய்ய, இறக்குமதி செய்ய அரசு தயாராகி வருகின்றது. அதிவேக வீதிகளை அமைப்பதன் மூலம் பெரிய அளவில் ஊழல் நடைபெறுகின்றது” – என்றார்.