“நாட்டின் நலன் கருதி அனைவரும் அமைச்சுப் பதவிகளைத் துறந்துவிட்டோம் என்று கூறிவரும் முன்னாள் அமைச்சர்கள், ஏன் அரசிலிருந்து வெளியேறாமல் ராஜபக்சக்களுடன் ஒட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்? இன்னமும் ராஜபக்சக்களை நம்புகின்றீர்களா என்று அவர்களிடம் கேள்வி கேட்க விரும்புகின்றேன்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமைக்கு ராஜபக்சக்கள் மட்டுமன்றி முன்னாள் அமைச்சர்களும் பொறுப்புக்கூற கூறவேண்டும். ஏனெனில் தீர்மானங்களை எடுக்கும் அமைச்சரவையில் அவர்களும் அங்கம் வகித்தவர்கள். பதவி ஆசைக்காக ராஜபக்சக்களின் கால்களில் அவர்கள் விழுந்தவர்கள். எனவே, கூட்டுப் பொறுப்பை அவர்கள் ஏற்கவேண்டும்” – என்றார்.
லக்ஸ்மன் கிரியெல்ல
இதேவேளை, ராஜபக்சக்கள் அங்கம் வகிக்கும் அமைச்சரவை நாட்டுக்குச் சாபக்கேடாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் எதிரணியின் பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிய வேளை பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பதவியை இராஜிநாமா செய்திருக்க வேண்டும். அப்போதுதான் முழு அமைச்சரவையும் கலைந்திருக்கும். ஆனால், அவர் இன்னமும் பதவியில் இருக்கின்றார். அதேவேளை, வெளிவிவகாரம், நிதி, கல்வி, போக்குவரத்து என நான்கு அமைச்சர்களையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இவ்வாறான நிலைமையில்தான் இந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கவுள்ளது” – என்றார்.
ஹர்ஷ டி சில்வா
பதவி ஆசைகளைக் கைவிட்டு ராஜபக்சக்கள் அனைவரும் பதவிகளிலிருந்து விலகி வீட்டுக்குச் செல்வதே சிறந்தது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைமையைச் சமாளிக்க வேண்டுமெனில் உறுதியான அரசு ஆட்சியில் இருக்க வேண்டும். ஸ்திரமற்ற அரசை வைத்துக்கொண்டு நெருக்கடி நிலைமைக்குத் தீர்வுகாண முடியாது. அதேவேளை, சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது.
ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருந்தால் பொருளாதார நெருக்கடி நிலைமை மேலும் அதிகரிக்கும். எனவே, பதவி ஆசைகளைக் கைவிட்டு ராஜபக்சக்கள் அனைவரும் பதவிகளிலிருந்து விலகி வீட்டுக்குச் செல்வதே சிறந்தது” – என்றார்.