இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பெறுவதற்கான சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் நேற்று விளையாடின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணியில் விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடியாக அடித்து அரைச் சதம் எடுத்ததுடன் அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றனர்.
இதனால், பெங்களூர் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 55 ஓட்டங்களில் வெளியேறினார்.
விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடினார்.
அவர் ஓவர் ஒன்றில் 4 பவுண்டரி, 2 சிக்சர் அடித்தது அணிக்கு பெரிதும் உதவியது. அணியில் அதிக அளவாக 66 ஓட்டங்கள் (34 பந்துகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதுவரை விளையாடிய 6 ஐ.பி.எல் போட்டிகளில் அவர் 197 ஓட்டங்கள் சேர்த்துள்ளார்.
போட்டி முடிந்த பின் பேசிய தினேஷ் கார்த்திக், நான் ஒரு பெரிய இலக்கை வைத்திருக்கிறேன் என முதலில் சொல்லி கொள்கிறேன். நான் உண்மையில் கடுமையாக உழைத்து வருகிறேன். நாட்டுக்கு சிறப்புடன் ஏதேனும் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கம்.
அது எனது பயணத்தின் ஒரு பகுதியாகும். இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவதற்காக ஒவ்வொரு விசயத்திலும் நான் முயன்று கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் அவர் இடம்பெற்றார்.
தொடர்ச்சியாக அதிரடி ஆட்டம் காட்டி வரும் தினேஷ் கார்த்திக், அஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.