ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு முற்றிலும் தடை – ஐரோப்பிய ஒன்றியம்

0
51
Article Top Ad

ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் வாங்குவதை 6 மாதத்தில் நிறுத்தவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டம் இன்று பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

அதில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ரஷ்யா மீதான 6 ஆவது கட்ட பொருளாதாரத் தடை விதிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்தார்.

அதன்படி, ரஷ்யா மீதான 6 ஆவது கட்ட பொருளாதார தடைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்ய அரசு நடத்தும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப தடை விதிக்கப்படும்.

ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் வாங்குவது 6 மாதத்தில் நிறுத்தப்படும், அதேபோல் ரஷ்யாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்தப்பட வேண்டும்.

உக்ரைனில் போர்க் குற்றத்தில் ஈடுபட்ட உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் மற்ற தனிநபர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.

மேலும், ஸ்விப்ட் சர்வதேச வங்கி பணம் செலுத்துதல் அமைப்பிலிருந்து ரஷ்யாவின் பெரிய வங்கியான ஸ்பெர்பேங்க் மற்றும் ஏனைய இரு பெரிய வங்கிகளை நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உக்ரைனின் அண்டை நாடான மால்டோவாவில் போர் பரவக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் மால்டோவாவுக்கு முழு ஆதரவு அளிக்கவும், அதன் ஒரு பகுதியாக, மால்டோவாவிற்கு கூடுதல் இராணுவ ஆதரவை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகமாக சார்ந்துள்ளன என்பதால் அதற்கான மாற்று விநியோகங்களைக் கண்டறிய வேண்டும். சில உறுப்பு நாடுகள் ரஷ்ய எண்ணெயை வலுவாக நம்பியிருப்பதால் இது எளிதானது அல்ல. ஆனாலும், நாம் இதை செய்ய வேண்டும்.

புதின் தனது மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்கு அதிக விலை கொடுக்க வேண்டும். ரஷ்ய வங்கிகள் மீதான தடை ரஷ்ய நிதித்துறையை உலகளாவிய அமைப்பிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்துவதை உறுதிப்படுத்தும் என்று ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் கூறினார்.

போர் முடிந்தவுடன் உக்ரைனுக்கான மீட்பு திட்டத்தையும் அவர் முன்மொழிந்தார். உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்ப நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் நிதி தேவை என்றும் அவர் முன்மொழிந்தார். அதன்மூலம், இறுதியில், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சேர உக்ரைனின் எதிர்காலத்திற்கு இது வழி வகுக்கும் என்றார்.

உக்ரைனில் நடந்த போருக்கு ரஷ்யாவை தண்டிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான நடவடிக்கைகளாக இவை பார்க்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அரசாங்கங்களின் தூதர்கள் இந்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஹங்கேரியின் எரிசக்தி பாதுகாப்புக்கு எவ்வாறு உத்தரவாதமளிக்கப்படும் என்பது பற்றிய எந்தத் திட்டத்தையும் நாங்கள் இதில் காணவில்லை என்று ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

ஆழமான விவாதத்திற்கு பின், விரைவில் இவை சட்டமாக்கப்படும் என தெரிகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறாவது சுற்று தடைகள், உறுப்பு நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டால், ரஷியாவிற்கு ஒரு முக்கியமான வரலாற்று மாற்றமாக இருக்கும்.