இலங்கைச் சிறையில் இருந்து தப்பிய கைதிகள் இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்பு?

0
370
Article Top Ad

இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து, தப்பிய கைதிகள் கடல் வழியாக தமிழகம் வரக்கூடும் என்பதால் தனுஷ்கோடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் கடலோர காவல் குழும பொலிசார் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் ஆளும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்ததாகக் கூறப்படுகின்றது.

இதை அடுத்து இலங்கையில் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்து சேதப்படுத்தினர்.

இதை அடுத்து இலங்கை சிறையில் இருந்து தப்பிய 50க்கும் மேற்பட்ட கைதிகள் கடல்வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்து கடலோர பகுதிகளில் பாதுகாப்பை துரிதப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கைக்கு அருகில் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதிகள் உள்ளதால் கடல் வழியாக சமூக விரோதிகள் ஊடுருவக்கூடும் என்பதால் தமிழக கடலோர காவல் குழும பொலிஸார் 5 அதி நவீன படகுகளிலும், இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான நீரிலும், தரையிலும் செல்லக்கூடிய அதிநவீன ஹோவர் கிராப்ட் மூலம் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, மண்டபம், சங்குமால், தொண்டி உள்ளிட்ட எளிதாக கடல் வழியே தமிழகத்துக்குள் நுழைய கூடிய பகுதிகளாக கருதப்படும் இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று தனுஷ்கோடி பகுதியில் கியூ பிராஞ்ச் பொலிஸார் மற்றும் மத்திய உளவுப் பிரிவினர் இரவு, பகலாக தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.