இலங்கைக்கான உதவிகளைப் பெற சர்வதேசக் கூட்டமைப்பு உருவாக்கம்

0
308
Article Top Ad

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, சீனா, பிரிட்டன் தூதுவர்களுடன் பேச்சைத் தொடங்கினார் ரணில்

பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருக்கும் இலங்கைக்கு நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான சர்வதேசக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களுடன் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் பேசினார்.

நேற்றுக் காலை பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டி எழுப்புவதே தனது ஒரே நோக்கம் எனக் கூறி இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, அமெரிக்கத் தூதுவர் ஜுலி ஜே.சங் மற்றும் சீனத் தூதுவர் கி சென்ஹொங் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்து இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஆரம்பகட்டப் பேச்சுக்களை நடத்தினார்.

இந்தியத் தூதுவருடனான கலந்துரையாடலின்போது இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது இலங்கைக்குத் தொடர்ந்து உதவி அளிப்பதாக இந்தியத் தூதுவர் உறுதியளித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு ஜப்பான் இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று ஜப்பானியத் தூதுவர் நேற்றைய சந்திப்பின்போது உறுதி வழங்கினார்.

மேலும் இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடித் தீர்மானம் எடுப்பதற்காக இன்று தாம் ஜப்பான் செல்லவுள்ளார் எனவும் ஜப்பானியத் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவுவதற்காக ஏனைய வெளிநாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஜப்பான் தூதுவரும் இந்தியத் தூதுவர் பிரதமருடன் கலந்துரையாடினர்.

அமெரிக்காவின் திறைசேரிக் குழுவினர் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் தொடர்பில் பிரதமர் அமெரிக்கத் தூதுவருடன் கலந்துரையாடினார்.

மேலும் 19 ஆவது திருத்தச் சட்டம் மற்றும்நாடாளுமன்றத்தில் கண்காணிப்புக் குழுக்களைப் பலப்படுத்துவது தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டது.

இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்குச் சீனா விருப்பம் கொண்டுள்ளது எனப் பிரதமருடனான சந்திப்பின்போது சீனத் தூதுவர் தெரிவித்தார். அத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகளை சீனா மீளாய்வு செய்யும் எனவும் அவர் கூறினார்.

பிரிட்டன் தூதுவர் மீண்டும் நேற்று இங்கிலாந்துக்குச் செல்வதற்கு முன்னர் பிரதமர் அவருடனும் தொலைபேசியில் பேசினார். இலங்கையின் நிலைமைகள் குறித்து பிரிட்டன் அரசுக்கு விளக்கம் அளிப்பதற்கு இதன்போது திட்டமிடப்பட்டது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு இலங்கைக்கு நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான சர்வதேசக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இந்தக் கலந்துரையாடல்களின்போது கவனம் செலுத்தப்பட்டது எனப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

இந்தச் சந்திப்புகளை அடுத்து பல உலக நாடுகளும் இலங்கைக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.