சீர்குலைந்துள்ள சீனா பொருளாதாரம்

0
226
Article Top Ad

தற்போதும் உலகத்தையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் கொரோனவின் தாயகம், சீனாவாகுமென்பது உண்மையாகும். எனினும், அதனை சீனா முழுமையாகவே மறுத்து இருந்ததுடன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகளையும் அங்கு செல்வதற்கு இடமளிக்கவில்லை.

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான வலுவான பாதுகாப்பை சீனாவே கொண்டிருக்கின்றது என பெருமையாகக் கூறினாலும், அந்த வைரஸ் தாக்கத்துக்குப் பின்னர், பொருளாதார ரீதியில் கடுமையான பாதிப்பை சீனா சந்தித்து வருகின்றது என்பது மட்டுமே உண்மையாகும்.

சீனாவின் நுகர்வோர் செலவு மற்றும் தொழிற்சாலைகளின் உற்பத்தி ஆகியன கடந்த மாதம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதனை சீனாவின் தேசிய புள்ளி விபரவியல் பணியக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதுமட்டுமின்றி, முதலீடும் வளர்ச்சியும் கடுமையாகக் குறைந்துள்ளது. வேலையின்மை சதவீதமானது கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகபட்சமாக 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று ஆரம்பத்தில் இருந்த வேலையின்மை சதவீதத்தை பூஜ்ஜியமாகவே சீனா சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தது என்பதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

வைரஸினால் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் சீனா, ஏனைய நாடுகளில் முதலிடுவதிலும் அதிகமான கவனத்தை செலுத்தவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்றாலும் மேக்ரோ கொள்கைகளை செயல்படுத்துவதில் விரைவான வேகம் மற்றும் முயற்சிகளை அதிரடியாக முன்னெடுக்கவேண்டிய தேவையை சீனப் பிரதமர் லி கெகியாங் வலியுறுத்தியுள்ளார்.

சந்தை நிறுவனங்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முயற்சிகள், நிலையான வளர்ச்சியின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை உயர்த்துவது தொடர்பில், வளர்ச்சியை நிலைப்படுத்துவது தொடர்பிலான கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கு, கொவிட்-19 இன் பிறப்பிடமாக சொல்லப்படும் யுனான் மாகாணத்திலேயே அண்மையில் நடைபெற்றது. அதில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் பயணியக நிலைக்குழுவின் உறுப்பினரான லி உரையாற்றியுள்ளார்.

சீனாவைப் பொறுத்தவரை, அங்கு இன்னுமே கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். கொரோனா வைரஸ் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை செலுத்தியுள்ளது.

அவ்வாறான அழுத்தங்கள் காரணமாக சீனாவில் 15 கோடிக்கும் அதிகமான சந்தை நிறுவனங்கள் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளன என்றும் லி குறிப்பிட்டுள்ளார்.

வௌ்ளம் போன்று அள்ளப்பட்டு வரும் தூண்டுதல்களால் அழுத்தங்களை தவிர்க்க முடியும் என்றும் அந்தக் கருத்தரங்கில் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு பொருளாதார ரீதியில் பல கோணங்களிலும் பாரிய பின்னடைவை சீனா சந்தித்து வருகின்றது என்பதை மறந்துவிடக்கூடாது. அதிலும் புதிய சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான தந்திரோபாயங்களை கையாளும் முயற்சியை சீனா சுரண்டிப் பார்த்துக்கொண்டே இருக்கின்றது.

பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை விரைவாக மீண்டும் உரிய பாதைக்குக்  கொண்டுவருவதற்கான யோசனைகள் உள்ளூர் அரசாங்கங்களால்மே மாதம் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் நாணயத் தாள்களை அதிகமாக அச்சிடுவதை சீனா தவிர்த்து வந்துள்ளது.

மக்களின் மீதான சுமைகளைக் குறைக்கும் வகையில், வரிக்குறைப்புகள், பணத்தை மீளப் பெறுதல் உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கும் அந்த செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் சீனா கடுமையான முயற்சிகளை கையாண்டு வருகின்றது என்பதையும் கவனத்தில் கொள்வேண்டும்.

இதேபோல், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் தானிய உற்பத்தி, எரிசக்தி விநியோகம், விலைகளின் ஸ்திரதன்மை ஆகியவற்றில் கூடுதலான அக்கறையை காட்டிவரும் சீனா, பொருளாதார வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருக்கும் அனைத்து காரணிகளையும் பராமரிக்க வேண்டுமென்பதில் கூடுதலான அக்கறை காட்டுகின்றது.

இதற்காக பல்துறை சங்கிலிகளை சீரமைப்பது குறித்தும் கூடுதலான கவனத்தை செலுத்திவருவதுடன் கரிசையையும் காண்பிக்கின்றது.

பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது என்பதை வெளிப்படையாக சீனா காண்பிக்காவிடினும், சீர்குலைந்திருப்பதை சீர்செய்வதற்கான அனைத்து அடித்தளங்களிலும் ஆழமாக கால்களை பதிப்பதற்கான வழிகளை வெட்டிக் கொண்டிருக்கின்றது என்பது மட்டுமே உண்மையாகும்.

நன்றி – தமிழ் மிரர்