இலங்கை-இந்தியா இடையிலான டிஜிட்டல் அடையாள அட்டை ஒப்பந்தத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்

0
185
Article Top Ad

இலங்கையர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் கையெழுத்தான ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக அறிவிக்கக் கோரி, சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட 27 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். சட்டத்தரணி கனிஷ்க விதாரனின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவில் கூறப்படுவதாவது, இந்திய அரசுடன் 2022ஆம் ஆண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியதாகவும், அதில் திருத்தம் செய்ய 2023 ஜனவரி 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் இரு அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முடிவுகள் பொதுமக்கள் அல்லது பாராளுமன்றம் மத்தியில் வெளிப்படையாக வெளியிடப்படாத நிலையில், இலங்கையர்களின் பயோமெட்ரிக் தரவுகளை இந்தியாவுடன் பகிரும் வாய்ப்பு இந்த ஒப்பந்தத்தால் ஏற்படலாம் எனவும், இது நாட்டின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தில் வெளிநாட்டு தலையீட்டை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்றன எனக் கூறி, இந்த திட்டத்தை நிறைவேற்றுவதைத் தடுக்கவும், இந்தியாவுடனான ஒப்பந்தத்தையும், தொடர்புடைய அமைச்சரவை முடிவுகளையும் செல்லுபடியற்றதாக்கும் உத்தரவு பிறப்பிக்கக் கோரப்பட்டுள்ளது.