பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை வெள்ளம் நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
இந்நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் நகரில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை 3 மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம் நிலச்சரிவு ஏற்பட்டது.
30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை 3 மணித்தியாலத்தில் பெய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதில் கார்கள் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவால் அப்பகுதியில் வசித்து வந்த நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணில் புதைந்தனர். அவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
நேற்று வரை 176 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 126 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவு இடம்பெற்று 7 நாட்களாகிவிட்டதால் இவர்களில் பெரும்பாலோர் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.