ஐ.நா பொதுச்சபை அவசரக் கூட்டத்துக்கான வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா – மாணவர்கள் மீட்பே பிரதானம் என விளக்கம்

0
307
Article Top Ad

ஐ.நா. பொதுச் சபை அவசர கூட்டத்தைக் கூட்டும் நிமித்தமாக பாதுகாப்பு அமைப்பு சார்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் பங்கேற்பதிலிருந்து இந்தியா விலகிக் கொண்டது.

ஐ.நா பாதுகாப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளில் 11 நாடுகள் வாக்களித்தன. ரஷ்யா உறுப்பு நாடாக இருந்தாலும் அதற்கு எதிரான தீர்மானம் என்பதால் எதிர்த்து வாக்களித்தது.

இந்தியா, சீனா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் வாக்களிக்கவில்லை.

1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐ.நா பொதுச்சபை அவசர கூட்டத்துக்காக 11 ஆவது முறையாக வாக்கெடுப்பு நடந்துள்ளது.

ஐ.நா பொதுச்சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்த உறுப்பு நாடுகள் கூடி நிலைமையைப் பற்றி விவாதிக்கவே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்ட இந்தியப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, உக்ரைன் நிலவரம் மிகவும் மோசமடைந்துள்ளது வேதனைக்குரியது. இந்த நேரத்திலும் கூட பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. உடனடியாக வன்முறையை விடுத்து வெறுப்புகளுக்கு முடிவு கட்டுங்கள். எங்களின் பிரதமர் மோடி, ஏற்கெனவே ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், ரஷ்யா, உக்ரைன் தரப்புகள் பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதை வரவேற்கிறோம். அதேவேளையில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறோம்.

எல்லையைத் தாண்டுவதில் பல்வேறு சிக்கல் நிலவுவதால் இந்தியர்கள் குறிப்பாக பெருமளவிலான மாணவர்களின் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக பிற நாட்டுடனான எல்லை வரை கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. இது மனிதாபிமான அடிப்படையில் உடனே மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை.

அதுதான் இந்திய அரசின் தலையாய பிரச்சனையாக உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நாங்கள் இத்தருணத்தில் வாக்களிப்பதிலிருந்து விலகியிருக்கிறோம் என்றார்.

ஏற்கெனவே கடந்த 26 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக நிபந்தனையின்றி திரும்ப வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்தது.

உக்ரைன் ரஷ்யா என இருதரப்பில் ஒரு தரப்பை மட்டும் இந்தியா ஆதரிக்க முடியாது. ஆதரிக்கவும் கூடாது. ஆகையால் ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடக்கும்போது நாம் நடுநிலை வகிப்பதே சரியான அணுகுமுறை என நிபுணர்கள் கூறுகின்றனர்.