நடிகையும், மொடல் அழகியுமான மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்கு பதிந்து இருவரையும் கைதுசெய்தனர்.
அதன்பின்பு இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது மீரா மிதுன் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவருக்கு எதிராக பிடிவிறாந்து உத்தரவு பிறப்பித்த சென்னை முதன்மை செசன்ஸ் நீதிம்றம், அவரைக் கைதுசெய்து முன்னிலைப்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிசாருக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் கைதுசெய்து சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
மீராமிதுன் தரப்பில் பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பொலிசார் தரப்பில் சிறப்பு அரசு சட்டத்தரணி எம்.சுதாகர் முன்னிலையாகி வாதாடினார்.
பிணை கோரிய மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், மீரா மிதுனை அடுத்த மாதம் (ஏப்ரல்) 4 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அவதூறு வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள நடிகை மீரா மிதுனின் பிணை மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன், இன்று விசாரணைக்கு வர உள்ளது.