கொழும்பு – காலிமுகத்திடலில் இன்று காலை திடீரெனக் குவிக்கப்பட்ட பொலிஸ் கனரக வாகனங்கள் முற்பகல் வேளை முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இன்று 8 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.
இந்நிலையில், காலிமுகத்திடல் பகுதியில் இன்று காலை திடீரென பொலிஸ் கனரக வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்தன. அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கு எதிராகச் சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் பகிரப்பட்டிருந்தன.
மக்களின் அமைதியான போராட்டத்தைச் சீர்குலைக்கும் அரசின் முயற்சி நாட்டுக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றின் மூலமும் அறிவித்திருந்தது.
அதன்பின்னர் பொலிஸ் கனரக வாகனங்கள் அங்கிருந்து முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.