‘கோட்டா கோ கம’வில் தங்கியிருப்போர் உடன் வெளியேறுக – ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் எச்சரிக்கை

0
195
Article Top Ad

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கொழும்பு – காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’வில் கூடியிருக்கும் இளைஞர்களும், யுவதிகளும் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்க முடியாது என்று பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தின் கூரையில் ஒலிபெருக்கியைப் பொருத்தி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மாத காலம் காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களும், யுவதிகளும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆளும் தரப்பின் குண்டர் குழுக்களின் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தனர்.

இதையடுத்து நாடு முழுவதும் அமைச்சர்களினதும், நாடாளுமன்ற உறுப்பினர்களதும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

அதேநேரம் நாடு முழுவதும் தற்போதும் பதற்றமான, குழப்பமான சூழல் நீடித்து வருகின்றது. இந்நிலையிலேயே பொலிஸார் இவ்வாறு அறிவித்துள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் மற்றும் கடந்த 9ஆம் திகதி மாலை 7 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் ஆகியவை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் எந்தவொரு நபரும் பொது இடங்களிலோ அல்லது பொது மைதானப் பகுதிகளிலோ கூடியிருப்பதற்குத் தடை விதிக்கப்படுகின்றது எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.