உயர் மட்ட சந்திப்பில் மோதிகொண்டு அமெரிக்க- சீன அதிகாரிகள்: பின்னணி என்ன?

0
705
Article Top Ad

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் நிர்வாகத்திற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்திற்கும் இடையே இடம்பெற்ற முதலாவது உயர்மட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்னர்.

அலஸ்காவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், சீனா மீது தாக்குதல் தொடுக்க அமெரிக்கா நாடுகளை தூண்டி விடுவதாக சீன அதிகாரிகள் குற்றம்சாட்டிய நிலையில் சீனா பகட்டாக செயல்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.

இந்த இரு வல்லரசு நாடுகளினதும் உறவு அண்மைய ஆண்டுகளில் மோசமடைந்து காணப்படுகிறது.

சின்ஜியாங்கில் உய்குர் முஸ்லிம்களை சீனா நடத்தும் விதம் போன்ற விவகாரங்களில் அமெரிக்கா அக்கறை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சுல்லிவன் மற்றும் சீனாவின் உயர்பட்ட வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான அதிகாரி யங் ஜெய்ச்சி மற்றும் வெளியுறவு அமைச்சர் வங் யி ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிளங்கன் ஆற்றிய ஆரம்ப உரையில் சின்ஜியாங்இ ஹொங்கொங், தாய்வான், அமெரிக்கா மீதான இணையத் தாக்குதல்இ எமது கூட்டணி நாடுகள் மீதான பொருளாதார அழுத்தங்கள் குறித்து சீனா மீது அப்பட்டமாக குறைகூறினார்.

‘இந்த ஒவ்வொரு செயற்பாடுகளும் உலகின் ஸ்திரத்தன்மையை பேணும் சட்டங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என்றும் அவர் எச்சரித்தார்.

இதற்கு பதிலளித்த யங், ‘அமெரிக்கா ஏனைய நாடுகள் மீது தனது இராணுவ மற்றும் பொருளாதார பலத்தை பயன்படுத்துகிறது’ என்று சாடினார்.

‘சாதாரண வர்த்தக பரிமாற்றங்களை தடுப்பதற்கு தேசிய பாதுகாப்பு என்ற கருத்தாடலை பயன்படுத்துவதாக இந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. இது சீனா மீது தாக்குதல் தொடுக்க சில நாடுகளை தூண்டுவதாக உள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் மனித உரிமை மிகக் கீழ் நிலையில் இருப்பதாகவும் கறுப்பின அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்படுவதாகவும் யங் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த சுல்லிவான், சீனாவுடன் மோதல் ஒன்றை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை என்றும் ஆனால்இ ‘எமது மக்கள் மற்றும் கூட்டாளிகளுக்காக நாம் எப்போது எமது கொள்கைகளுக்காக எழுந்து நிற்போம்’ என்றும் தெரிவித்தார்.

சர்வதேச ஊடகங்களின் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வாக்குவாதம் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் வழங்கப்படும் ஆரம்ப உரைக்கான இரண்டு நிமிடங்கள் என்ற இணக்கப்பாட்டை சீனா மீறியதாக அமெரிக்க பிரதிநிதிகள் குற்றம்சாட்டினர்.

‘சீன பிரதிநிதிகள் பொதுவெளியில் பகட்டாக செயற்பட இங்கே வந்திருக்கிறார்கள்’ என்று மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் குற்றம்சாட்டினார்.

எனினும் அமெரிக்காவே இந்த ஒழுங்குமுறையை மீறியதாக சீன பிரதிநிதிகள் அந்நாட்டு அரச ஊடகத்தில் தெரிவித்திருந்தானர்.

சீனாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள் பற்றி அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக அமெரிக்கா மீது அவர்கள் குற்றம்சாட்டினர்.

எனினும் ஒரு தருணத்தில், ‘அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான கடந்த காலத்தின் கசப்பான உறவு தொடரக் கூடாது’ என்று யங் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காலத்தில் சீனா மற்றும் அமெரிக்க உறவும் மோசமடைந்தது. இந்நிலையில் ‘ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை ஒன்றை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சீனா தயாராக உள்ளது’ என்று வங் குறிப்பிட்டார்.