மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்படுமா?

0
543
Article Top Ad

கடந்த 2 வருடங்களாக செயற்பாடின்றிக்காணப்படும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது குறித்து தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி பெறும் செயற்பாடு பிற்போடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது மாகாண சபை தேர்தலை பிற்போடுவது குறித்து தீர்மானம் பெறப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனினால் மாகாண சபை தேர்தல் நடத்துவது குறித்த புதிய சட்ட வரைபு அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் நூற்றுக்கு 70 வீதம் தொகுதி முறையிலும், நூற்றுக்கு 30 வீதம் விகிதாசார முறையிலும் உறுப்பினர்களை தெரிவுசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை இணக்கம் வெளியிட்டுள்ளது.

எனினும் ஒரு தொகுதியிலிருந்து ஒரே கட்சியை சார்ந்த மூன்று உறுப்பினர்களை தெரிவுசெய்வது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையிலுள்ள பலர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதனையடுத்து குறித்த யோசனையை தொடர்பில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபை முறையையை இல்லாது ஒழிக்க வேண்டும் என அரசாங்கத்திலுள்ள முக்கியஸ்தர்கள் சிலர் கருத்துக்களை வெளியிட்டுவந்த நிலையில் தாமதிக்காது மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜெனிவாவிற்கான இந்தியத் தூதுவர் உட்பட்டவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் எதிர்வரும் ஜுன் மாதமளவில் தேர்தல் நடைபெறவாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.