சீனப் பெருஞ்சுவரை நேரில் தரிசித்தபோது உணர்ந்த பெரும் யதார்த்தம்!

0
854
Article Top Ad

கொரோனா வைரஸ் என பொதுவாக அறியப்படும் கொவிட் 19னால்  ஏறத்தாழ ஸ்தம்பித்துப் போயிருந்த உலகம் மெல்ல மெல்ல வழமைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது.

பல்வேறு தொழில்துறைகளும் கொவிட்-19 க்கு முன்பிருந்த நிலையை எட்டுவது தொடர்பாக பல்வேறு கால எல்லைகளை எதிர்வுகூறினாலும்  அத்தியாவசிய தேவைகளுக்கு அன்றி வெளிநாடுகளுக்கு நாடுகாண் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வது ஆகக்குறைந்த பட்சம் அடுத்து ஓருவருட காலப்பகுதிக்கு இடம்பெறமாட்டாது என்பதை பயண நிபுணர்களின் கருத்துக்கள் உணர்த்திநிற்கின்றன.

கனவுகளிலேயே  உலகத்தை சஞ்சரிக்க  கொரோனா வைரஸ்  முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில் கடந்த கால பயண நினைவுகளை மீட்டுப்பார்ப்பார்க்கின்றேன்.   நான் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களில் இன்று மனதைவிட்டு அகலாத பயணமாக உலகின் புதிய எழு அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவருக்கு  2016ம் ஆண்டில் மேற்கொண்ட பயணம்  இன்றும் என் மனதில் நீங்கா நினைவுகளாகப் பதிந்துள்ளது.

சீனத் தலைநகர் பீஜிங்கில் இருந்து  காலை 8 மணியளவில்  ஆரம்பித்து சுமார் ஒரு மணிநேரம்  பஸ்ஸில்  பயணித்து  Mutianyu என்ற இடத்திற்கு சென்றோம்.

சுமார் 6000 மைல்கள் நீளமான  சீனப் பெருஞ்சுவரை பல்வேறு  பகுதிகளிலுள்ள வாயில்களினூடாக ஏறமுடியும் என்றாலும் மிகவும் நேர்த்தியாக சீரமைக்கப்பட்ட பகுதியாக Mutianyuல் உள்ள சீனப் பெருஞ்சுவரே காணப்படுகின்றது.

காலை 9 மணிக்கு நாம் சீனப் பெருஞ்சுவரில் கடுங்குளிருக்கு மத்தியில் ஏறியது நினைவிலுள்ளது. மார்ச் மாதப்பகுதியில் அந்தப்பகுதயில் அதிகபட்ச வெப்பநிலை 12 பாகை செல்லியஸைத்தாண்டுவதில்லை . எம்முடைய காலத்திற்கு கிட்டத்தட்ட 2 -3 பாகைதான் வெப்பநிலை இருந்திருக்கக்கூடும் என்ற  அளவிற்கு குளிர் வாட்டியது. குளிரைப்பொருட்படுத்தாமல் 20-30 அடிகள் ஏறத்தொடங்கியதுமே மூச்சுமுட்டத்தொடங்கியது.

இருந்தாலும் அதீத  ஆர்வத்தால் மெல்ல மெல்ல சுமார் 200 மீற்றர் தூரத்திற்கு சீனப் பெருஞ்சுவரில் நடந்ததை மறக்கமுடியாது.  வாழ்க்கையில் ஒருமுறையேனும் விஜயம் செய்து பார்க்கவேண்டிய அதிசயம் இந்தச்சீனப் பெருஞ்சுவர் என்றால் மிகையல்லவே!

சீனப் பெருஞ்சுவர் பற்றிய விடயங்களை புத்தகங்களிலும் கட்டுரைகளிலும் மாத்திரமே முன்னர் அறிந்துவைத்திருந்த எனக்கு நேரில் பார்த்தது முதலில் பிரமாண்டத்தை கண்முன் காட்டியது. பல நூற்றாண்டுகளாக பல்வேறு சீன அரச வம்சத்தினரால் கட்டிமுடிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவரை நிர்மாணித்தபோது இடம்பெற்ற துயரங்களை எம்மோடு வந்த சீன வழிகாட்டி  கூறிய போது கண்கள் பனித்தன. ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் சுவர் நிர்மாண வேலைகள் நடைபெற்ற போது இறந்த நிலையில் அதிலே புதைக்கப்பட்டனர் என்ற விடயம் மனதில் தீராத கவலைகளை ஏற்படுத்தியது

வெளியே பிரமாண்டமாக சீனாவின் பெருமையாக பார்க்கப்படும் சீனப்பெருஞ்சுவர் மீது நான் நின்ற இடத்தில் எத்தனை பேரின் உடலங்கள் புதைக்கப்பட்டிருக்மோ என்ற வேதனையும் வாட்டியது. உலகில் ஒவ்வொரு பிரமாண்டங்களுக்கும் பெருமைக்குரிய செயற்பாடுகளுக்கு பின்னணியில் எத்தனை பேரின் உயிர்கள் எவ்வளவு வேதனைகள் சோகங்கள் இருக்கும் என்ற யதார்த்த உணர்வை சீனப் பெருஞ்சுவருக்கான விஜயம் தந்த தமையை ஆண்டுகள் பல கடந்தும் நினைத்துப் பார்க்கையில் மெய்சிலிர்க்கின்றது.

ஆக்கம்: அருண் ஆரோக்கியநாதன்

“உலகம் என்பது ஒரு புத்தகம் . பயணம் செய்யாதவர்கள் அதில் ஒரு பக்கத்தையே படிக்கின்றனர்” புனித அகஸ்தீனார்

 

“THE WORLD IS A BOOK AND THOSE WHO DO NOT TRAVEL READ ONLY A PAGE.” ~ SAINT AUGUSTINE

நினைத்தாலே மெய்சிலிர்க்கவைக்கும் சீனப் பெருஞ்சுவரின்  வரலாற்றுத் தொன்மை, பிரமிக்கவைக்கும்  பெருமை ஆகியவற்றை இதனைவிடவும் சிறப்பாக எழுத முடியுமா என்ற அளவிற்கு Roarmedia மூன்றாண்டுகளுக்கு  முன்னர் எழுதியிருந்த கட்டுரையை இங்கு தந்துள்ளேன்.

ஆகப்பெரிய அதிசயம் சீனப்பெருஞ் சுவர்

 

 

https://youtu.be/7Dbuc6vIRnE