கடல்தாண்டும் கலையுறவு

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எல்லைகடந்த உயர்ந்த ஒன்றிணைவும் பரிமாற்றங்களும் பெருந்தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

0
644
Article Top Ad

 

“ஆஹுதி”, இது ஒரு சித்திரசேன நடனக் கல்லூரி தயாரிப்பு| புகைப்பட மூலம் :கார்த்திக் வெங்கட்ராமன்

இலங்கையின் வடமாகாணத்தில் தான் வசித்துவரும் யாழ்ப்பாணத்திலிருந்து பயணிப்பதற்கான தடைகளை இப்பெருந்தொற்றுநோய் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெறவிருந்த பெருமளவான கச்சேரிகளை ரத்து செய்ய வேண்டிய நிலையினை யாழ்ப்பாணம் பி.எஸ்.பாலமுருகன் எதிர் கொண்டிருந்தார்.

‘பல்வேறு இணைய ரீதியிலான நிகழ்வுகளில் பங்கு பற்றியிருந்தேன். அத்துடன் பல்வேறு ரெக்கோடிங்களையும் இங்கு மேற்கொண்டு அங்குள்ள ஏற்பாட்டாளர்களுடன் அதனை பகிர்ந்து கொண்டாலும் அவாநிறைந்த சபையோர் முன்னிலையில் நேரடியாக இசைக்கச்சேரிகளை நடத்துவதற்கு ஈடானதாக எதுவும் அமையப்போவதில்லை’ என்று மிகவும் உறுதியாகப் பெருகிவரும் ரசிகர் கூட்டத்தினை தென்னிந்தியாவில் கொண்டிருக்கும் நாகஸ்வர கலைஞரான பாலமுருகன் கூறுகிறார்.

யாழ்ப்பாணம் பாலமுருகன்| புகைப்பட மூலம் கே. ராஜசேகரன்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் அவர் இசைத்த சாருகேஷியை ரசித்தவர்கள் அந்த ஆற்றுகையினை மறந்துவிடவில்லை என்பதுடன் அவரை நினைவூட்டாமல் இன்னொரு சாருகேஷியினை அதற்குப் பின்னர் அவர்கள் மெச்சியிருக்கவும் இல்லை. காற்று வாத்தியமான அவரது கருவியிலிருந்து பிறக்கும் கம்பீரமான அந்தநாதம் நீண்டு தரித்தும் முழுமையான மூச்சுடனும் உயிரோட்டம் மற்றும் உணர்வுடனும் வழிந்தோடி இரசிகர்களை வசியப்படுத்துகிறது.

அவரைப்போன்ற இலங்கை கலைஞர்களுக்கு இந்தியாவில் ஆற்றுகையினை நிகழ்த்துவது வெளிநாடுகளுக்கு செல்லும் வழமையான சிக்கல்களுக்கு அறைகூவல் விடுப்பதாகவே அமைகின்றது. ஒப்பீட்டளவில் நட்பு நாடாக இருந்தாலும் விசாபெற்றுச்செல்ல வேண்டிய இப்பிராந்தியம், பல்வேறு விமான சேவை தெரிவுகளை கொண்டிருக்கும் அதேவேளை கொழும்புக்கும் சென்னைக்கும் இடையிலான விமானப்பயணம் ஒரு மணித்தியாலத்துக்கு குறைவான நேரத்தை எடுப்பதுடன், 2019 யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலகுவான பயணத்தை மேற்கொள்வதற்கு வழிவகுக்கின்றது.
‘அங்கு சென்று இசை நிகழ்வுகளை நடாத்துவதற்காக  எல்லைகள் திறக்கும் வரையிலும் என்னால் காத்திருக்க முடியாது’, என பாலமுருகன் குறிப்பிடுகிறார்.

கண்டிய நடன நிபுணரும் குருவுமான உபேகா சித்திரசேனா உலகளாவிய ரீதியில் ஆற்றுகைகளை நடத்தியிருந்தாலும் குறிப்பாக சென்னை உட்பட இந்தியாவில் உள்ள ரசிகர்கள் சற்று வேறுபட்டவர்கள் என கூறுகிறார். ‘ நிகழ்வு முழுவதும் அமர்ந்திருக்கும் வரிசைவரிசையாக காணப்படும் வயதானவர்கள் மற்றும் சிறுவர்கள் இந்த நிகழ்வுகளில் தமக்குப் பிடித்த தருணங்களை அகத்தூண்டுதலால் மெச்சுகின்றனர். அவ்வாறான ஈடுபாட்டையும் உணர்வினையும் காண்பது மிகவும் அரிதானதாகும்.’

நிருத்யாக்ரமுடனான ஒன்றிணைவு

இலங்கையின் மிகப்பிரபலமான கண்டிய நடன நிபுணரான உபேகாவின் தந்தைக்குப் பின்னர் பெயரிடப்பட்ட கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் சித்ரசேன நடன நிறுவனத்தைச் சேர்ந்த கலைஞர்களும் நிருத்யாக்ரம் குழுவினரும் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக ஒன்றிணைந்து ஆற்றுகைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உபேகா சித்திரசேன | புகைப்பட மூலம் : டொமினிக் சன்சோனி

சம்ஹாரா (2012) மற்றும் ஆஹுதி (2019) ஆகிய இரண்டு தயாரிப்புக்களும் இருவேறு பாரம்பரியங்களை கொண்ட கண்டிய மற்றும் ஒடிசி வடிவங்களை ஒன்றிணைத்த ஆற்றுகைகளாக இருந்தது. இப்பெருந்தொற்றுநோய் காரணமாக இரண்டு குழுவினரும் கடந்த வருடம் கூட்டு ஆற்றுகைகளை அரங்கேற்றத் தவறியுள்ளனர். ஆனாலும் சகல வழிகளிலும் அவர்கள் தொடர்பினை பேணி வருகின்றனர். தொழில் ரீதியானதும் கலை ரீதியானதுமான அவர்களின் நீண்ட ஒன்றிணைவானது சித்ரசேனாவுக்கும் நிருத்யாக்ரம் கலைத்துறை பணிப்பாளரும் ஒடிசி நிபுணருமான சுரூபா சென் இடையிலான நட்புறவினைப்போன்ற விலை மதிக்க முடியாத நட்பினை உருவாக்கியுள்ளது. இரு தரப்பிலிருந்தும் பாக்கு நீரிணைக்கு மேலாக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட அல்லது முன்கூட்டியே திட்டமிடாத பயணங்கள் இந்த உறவினை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

ஆஹுதி நிகழ்வுக்காக இரண்டு நடன பள்ளிகளினதும் கலைஞர்கள் 2019 இல் பெங்களுருவில் ஒத்திகையை மேற்கொண்டிருந்தனர். மறுநாள் குரு பூர்ணிமா நிகழ்வுக்காக உபேகா சித்ரசேனாவை அழைப்பது எவ்வளவு பொருத்தமானதாக இருக்குமென சித்திரசேனாவின் கலைத்துறைப் பணிப்பாளர் ஹேஷ்மா விக்னராஜாவிடமும் தலைமை நடனக்கலைஞர் தாஜி டயஸ் ( இருவரும் சித்ரசேனாவின் மருமகள்மார்) அவர்களிடமும் சுரூபா சென் சாதாரணமாக கூறினார். ‘ இவ்விடயம் தொடர்பாக ஒரு சனிக்கிழமை மாலை நான் எனது மருமகள்மாரிடமிருந்து தொலைபேசி அழைப்பினை பெற்றிருந்தேன். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் சுரூபாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரது வாசல்படிகளில் நின்றிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் என்னை கண்டதும் அவரிடம் தோன்றிய உணர்ச்சி வெளிப்பாட்டினை நான் இன்னும் மறக்கவில்லை.’ சித்ரசேனா கூறுகிறார். மேலும் ‘ இதனைப்போன்ற பல விடயங்கள். குறிப்பிடத்தக்க ஒத்திகைகள், ஆற்றுகைகள், உரையாடல்கள், பிறந்தநாள் நிகழ்வுகள் போன்ற அனைத்தையும் நான் தற்பொழுது தவற விடுகின்றேன்’. அவரது தாயாரான சிரேஷ்ட கண்டிய நடன நிபுணரும், நட்டுவாங்க கலைஞரும் குருவுமான வஜிர சித்திரசேனா கடந்த வருடம் இந்தியாவின் பத்மஸ்ரீ விருதுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆனால் அந்த கௌரவத்தை பெற்றுக்கொள்வதற்காக பெருநோய் காரணமாக அவரால் புதுடில்லிக்கு பயணிக்க முடியவில்லை.

திவ்யா சுஜேன் | நன்றி தி ஹிந்து

கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் பரதநாட்டிய கலைஞரும் ஆசிரியையுமான திவ்யா சுஜேன் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டிற்கு செல்வதற்கான பல்வேறு காரணங்களை கொண்டிருந்தார். தனது அபிநயக்ஷேத்ரா நடனப் பள்ளியின் தயாரிப்புக்களை அவர் அங்கு கொண்டு செல்லவில்லையாயின் இசைத்துறை சார்ந்த பணிகளுக்காக அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ‘லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் மற்றும் ராஜ்குமார் பாரதி போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து நமது தயாரிப்புக்காக பணியாற்றுவது நமக்கு கிடைக்கும் பாரிய கௌரவம் ஆகும். இந்த ஒலிப்பதிவுகளுக்காக நான் இரு வாரங்கள் அங்கு தங்கியிருக்கும் நிலை ஏற்படும்’ என்று அவர் கூறுகிறார்.

அரங்கேற்றங்களை நிகழ்த்தும் தனது மாணவர்களுக்குரிய ஆடைகளை பெற்றுக் கொள்வதற்கும்இ புகைப்படங்களை எடுத்துக் கொள்வதற்காகவும் திவ்யா அவர்களை சென்னைக்கு அழைத்துச் செல்கின்றார். ஆனாலும் இந்த நடனக் கலைஞர் பிரபலமான பரதநாட்டிய நிபுணரான தனது குரு சி.வி. சந்திரசேகர் அவர்களை சந்திப்பதை அதிகம் தவறவிடுவதாக உணர்கின்றார். கடந்த மேயில் அவரது 85 ஆவது பிறந்த தினத்தில் அவரை சந்திப்பதற்கு திவ்யா தயாராக இருந்தபோதும் பயணங்கள் முடக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் அந்த சந்தர்ப்பத்தினை குறிப்பிடும் முகமாக இலங்கை பரத நாட்டிய கலைஞர்களின் உலகளாவிய அமைப்பினை இலங்கையில் ஆரம்பித்து 1983 தமிழர்களுக்கு எதிரான கலவரம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய ஆசிரியர்கள் கலைஞர்கள் போன்ற அனைவரையும் ஒரே தளத்தில் ஒன்றுகூடும்வகையில் அந்த அமைப்பினை அவர் உருவாக்கியுள்ளார். பிரியதர்ஷினி கோவிந்த் போன்ற இந்திய கலைஞர்களுடன் இணைந்து அவர் இணைய ரீதியிலான விரிவுரைகளை நடத்தியிருந்ததுடன் இந்திய கலைஞர்களுடன் இணைந்து மெய்நிகர் மார்க்கங்களூடாக நட்டுவாங்கம் கற்கைநெறியினை ஆரம்பித்திருந்தார். ‘ நேரடியாக சந்திக்கும் வரையில் இலங்கை-இந்திய கலைஞர்கள் இடையிலான உறவானது இணையம் ஊடாக தொடர வேண்டும் என நான் நம்புகிறேன்’ என்று அவர் கூறுகிறார்.

இலக்கிய சந்திப்புக்கள்

‘இவ்வாறான ஒரு முடக்கத்தினை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை’ என்று இலங்கையில் கம்பன் கழகத்தை ஆரம்பித்து நடத்திவரும் பிரபலமான தமிழ் புலமையாளர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் கூறுகிறார். சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்காகவோ அல்லது இலக்கிய சந்திப்புகளில் கலந்து கொள்வதற்காகவோ தொடர்ச்சியாகவும் சில தடவைகளில் மாதம் ஒன்றில் ஐந்து தடவைகள் கூட இந்தியாவுக்கான பயணத்தினை மேற்கொண்டிருக்கும் ஜெயராஜ் ஒவ்வொரு வருடமும் இந்திய கலைஞர்களையும் புலமையாளர்களையும் இலங்கைக்கு அழைத்து வரும் முன்னணி சக்தியாக விளங்குகிறார். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கம்பன் கழகத்தினால் கட்டணமின்றி நடத்தப்பட்டுவரும் கலை விழாக்கள் பெருமளவான ரசிகர் கூட்டத்தினை கொண்டுள்ளது. இறுதியாக நடைபெற்றிருந்த 2020 கலைவிழாவில் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

கம்பவாரிதி ஜெயராஜ் |நன்றி தி ஹிந்து

‘1990களின் நடுப்பகுதியிலிருந்து நாம் இந்திய கலைஞர்களை அழைத்து வருகிறோம். அத்துடன் இங்குள்ள ரசிகர்களுடன் பல்லாண்டு காலமாக அவர்கள் ஒரு விசேட பிணைப்பினை உருவாக்கியுள்ளார்கள். நமது இல்லங்களில் தங்கி, எம்முடன் உணவருந்தி எம்முடன் நேரத்தைச் செலவிட்டு…இவ்வாறாக மிகவும் வலுவாக காலாகாலமாக கட்டியெழுப்பப்பட்ட உறவுகள் மட்டுமே தற்போது முன்னொருபோதும் இல்லாதவாறு ஏற்பட்டிருக்கும் பெருநோய் சூழலை தைரியப்படுத்துபவையாக அமைகின்றன’ என்று ஜெயராஜ் கூறுகிறார்.

அவுஸ்திரேலியாவில் இருக்கும் தனது குழுவுடன் இணைந்து கொழும்பு கம்பன் கழகம் மெய்நிகர் இலக்கிய சந்திப்பு ஒன்றினை நடத்தியதுடன் இவ்விடயம் தொடர்பான வீடியோக்களை தனது இணையதளத்தில் பகிர ஆரம்பித்துள்ளது. கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் மிகவும் விரும்பப்படும் அதேநேரம் கிரமமானவருகையினை கொண்டிருக்கும் இசைக்கலைஞரான பாம்பே ஜெயஸ்ரீ அவர்களுடன் பக்திப் பாசுரங்கள் தொகுதி ஒன்றுக்காக ஜெயராஜ் அவர்கள் தொலைவிலிருந்தவாறு பணியாற்றி வருகிறார்.

கலைஞர்களும் ரசிகர்களும் ‘உறவாட ஏங்குகிறார்கள்’ என்று கூறும் ஜெயராஜ் நேரடியான இசை விழாக்கள் இவ்வருடம் நடைபெறுவதற்கான சாத்தியங்களையும் எதிர்பார்க்கின்றார்.

ஆங்கிலத்தில் கட்டுரையை எழுதியவர் மீரா ஸ்ரீநிவாசன் – தி ஹிந்துப்பத்திரிகையின் இலங்கைக்கான செய்தியாளர்

கடல் தாண்டி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே உறவை வளர்க்கும் கலைகள் பற்றியும் அதனை முன்னெடுக்கும் கலைஞர்கள் இந்த பெருந்தொற்று நோய்க்காலத்தில் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் இந்தக் கட்டுரை கலைநயத்தோடு ஆராய்கின்றது. அதிகமான மக்களுக்கு சென்றடையவேண்டும் என்ற நன்நோக்கில் குளோப் தமிழ் இணையத்தளம், தி ஹிந்துப் பத்திரிகையில் ஆங்கிலத்தில் பிரசுரமான இந்த கட்டுரையை தமிழாக்கம் செய்து மீள்பிரசுரிக்கின்றது. நன்றி தி ஹிந்து