வெளிநாட்டுத் தொடர்பைக்கொண்ட சிலரே இராணுவத்துக்கு எதிராக பொய்ப் பிரசாரம் – தளபதி சவேந்திர சில்வா யாழில் சீற்றம்

0
516
Article Top Ad

“இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான ரீதியிலான பணிகளையே முன்னெடுக்கின்றது. ஆனால், வெளிநாட்டுத் தொடர்புகளைக் கொண்டுள்ள சிலரே இராணுவம் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். உண்மையில் இராணுவம் என்ன செய்கின்றது என்பதைத் தமிழ் மக்கள் அறிவார்கள்.”

– இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

போரின்போது, குடும்பத் தலைவனை இழந்த பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள வீடொன்றை இன்று திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான இராணுவமே ஆகும். இதனை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இங்குள்ளவர்களுக்குப் பணத்தை அனுப்பி இராணுவத்தினர் தொடர்பாகப் பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளேன். இதன்படி தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் தமிழ் – சிங்களப் புத்தாண்டு வர இருக்கின்றது. எனவே, தற்போதைய நிலைமையில் பொதுமக்கள் தமது புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது” – என்றார்.