இளவரசர் பிலிப் வாங்கிய முதலாவது கார் கொழும்பில் கம்பீரமாக காட்சியளிப்பதை கண்ணுற்றதுண்டா?

இந்தக் காரை கொள்வனவு செய்தபோது ஒரே நேரத்திலேயே காரின் விலைக்குரிய பணத்தை ஒரே நேரத்திலேயே இளவரசரால் கொடுக்க முடியாமல் போனது எனவும் இதனால் இரு தவணைகளாக அவர் பணத்தை ஒரே மாதத்தில் செலுத்தி முடித்ததாக அந்த மியுஸியத்திலுள்ள ஆவணங்கள் கூறுகின்றன.

0
461
Article Top Ad
படப்பிடிப்பு: Aro

பிரித்தானிய மகாராணி எலிஸபேத் அம்மையாரின் மறைந்த கணவர் இளவரசர் பிலிப் பயன்படுத்திய முதலாவது கார் தற்போதும் கொழும்பில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது.

90 வருடங்கள் பழைமையான இந்தக் கார் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் ஒன்றான கோல்ஃபேஸ் ஹோட்டலில் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9ம்திகதி காலமான  Duke of Edinburgh எடின்பரோ கோமகனின் இறுதிச் சடங்குகள் இன்றையதினம் நடைபெறவுள்ளது.

1940ல் பிரித்தானிய கடற்படைச் சேவைக்காக கொழும்பில் பணிக்கமர்த்தப்பட்டிருந்தபோது 1935 Standard Nine  ஸ்டாண்டர்ட் நைன் என்ற இந்தக் காரை 12 ஸ்டேர்லிங் பவுண்டுகளுக்கு மறைந்த இளவரசர் பிலிப் கொள்வனவுசெய்திருந்தார்.

படப்பிடிப்பு : Aro

“1950களின் ஆரம்பத்தில் இளவரசர் பிலிப் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவர் தன்னுடைய முதலாவது காரை வந்து பார்வையிட்டார் “என தற்போது அந்தக் காருக்கு உரிமையாளராக திகழும் கோல்ஃபேஸ் ஹோட்டல் உரிமையாளர் சஞ்சீவ் கார்டினர் கூறுகின்றார்.

“தற்போது காரின் பிரேக்குகள் வேலைசெய்கின்றன என நம்புகின்றேன். அப்போது அவை வேலைசெய்யவில்லை “என நகைச்சுவையாக இளவரசர் பிலிப் கூறியதாக சஞ்சீவ் கார்டினர் மேலும் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போதே தாம் முதலாவதாக கொள்வனவு செய்த கார் இதுதான் என்பதை அவர் ஒப்புக்கொண்டிருந்தார். ஸ்டான்டர்ட் மோட்டார் கார் கழகத்தின் போசகராகவும் அவர் திகழ்ந்திருந்தார்.

படமூலம்: AFP

இலங்கையிலுள்ள ஹோட்டல்களில் மிகப் பழைமையானவற்றில் ஒன்றாக விளங்கும் சஞ்சீவ் கார்டினரின் கோல்ட்ஃபேஸ் ஹோட்டல் தற்போது அந்த காரை மையப்படுத்தி ஒரு மியுஸியமொன்றை வடிவமைத்துள்ளனர்.

ஹோட்டலுக்கு விருந்திற்காக வரும் வாடிக்கையாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் இந்தக் காரை கண்டுகளித்துவருகின்றனர்.

இந்தக் காரை கொள்வனவு செய்தபோது ஒரே நேரத்திலேயே காரின் விலைக்குரிய பணத்தை ஒரே நேரத்திலேயே இளவரசரால் கொடுக்க முடியாமல் போனது எனவும் இதனால் இரு தவணைகளாக அவர் பணத்தை ஒரே மாதத்தில் செலுத்தி முடித்ததாக அந்த மியுஸியத்திலுள்ள ஆவணங்கள் கூறுகின்றன.

இளவரசர் பிலிப் கொழும்பிலிருந்து 260 கிலோமீற்றர்கள் தொலைவில் திருகோணமலையிலிருந்த கடற்படை தளமொன்றிற்கே  முதன் முதலாக  இந்தக் காரை செலுத்திச் சென்றதாக பதிவுகள் கூறுகின்றன.

இந்தக் காரின் மீற்றரைப் பார்க்கின்றபோது இதுவரை 93 040 கிலோமீற்றர்கள் பயணித்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இன்னமும் இந்தக் கார் இயங்கக்கூடிய நிலையில் உள்ளபோதும் இதற்குள்ள அதி உயர் காப்புறுதிக் கட்டணம் காரணமாக வெளியே கொண்டுசெல்வதில்லை என இதன் உரிமையாளர் சஞ்சீவ் கார்டினர் தெரிவித்தார்.

சஞ்சீவ் கார்டினரின் தந்தை சிறில் கார்டினர் இந்தக் காரை 1950களின் ஆரம்பத்தில் கொள்வனவு செய்திருந்தார்.

படப்பிடிப்பு : Aro

1954ம் ஆண்டில் மகாராணி எலிஸபேத் மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோது அவர்கள் பயன்படுத்திய Cadillacகார்டிலெக் என்ற காரையும் சஞ்சீவின் தந்தை சிறிலே வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

100வது பிறந்த தினத்திற்கு சுமார் 2 மாதங்களே உள்ள நிலையில் கடந்த 9ம் திகதி காலமான இளவரசர் பிலிப் கார்கள் மீது பற்றுக்கொண்டவர் என்பதுடன் தாமே காரைச் செலுத்தும் வழக்கமுடையவர்.

எனினும் 2019ம் ஆண்டு தனது 97வது வயதில் அவர் செலுத்திய கார் விபத்திற்குள்ளாகி இருவர் காயமுற்றதையடுத்து தனது வாகனம் செலுத்தும் அனுமதிப் பத்திரத்தை திரும்ப ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.