நேற்று அழுத்தியுரைத்த கருத்துக்களை இன்று அடியோடு மறுதலித்த கர்தினால் !

0
440
Article Top Ad

நேற்றுக்கூறிய கருத்தில் இருந்து 180 பாகைக்கு மீளத் திரும்பியவராக, 2019ம் ஆண்டு ஈஸ்டர் தற்கொலைத்தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை என்ற அர்த்தப்பட தாம் கூறவில்லை என கொழும்பு மறைமாவட்ட பேராயரும் இலங்கையிலுள்ள கத்தோலிக்கர்களின் தலைமைக்குருவுமான கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தமது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு தாக்குதல் மேற்கொண்டவர்களை பகடைக்காய்களாக பெயர் குறிப்பிடாத சில தரப்புக்கள் பயன்படுத்தியுள்ளதாக தம்மை மேற்கொள்காண்பித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் திரிவுபடுத்தப்பட்டதாகவும் தாம் சர்வதேச சக்திகளையும் வகாபிஸத்துடன் அவற்றிற்குள்ள தொடர்புகளையுமே குறிப்பிட்டதாகவும் கர்தினால் மேலும் தெரிவித்தார்.

‘ என்னுடைய கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. இந்த நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதமோ அதன் விரிவாக்கமோ இல்லை என்று நான் ஒருபோதிலுமே குறிப்பிடவில்லை. நான் எந்தவொரு அரசியல் சக்தியைப் பற்றியும் குறிப்பிடவில்லை. நான் வகாபிஸம் பற்றியும் அதனை எப்படி சில சக்திமிக்க நாடுகள் பயன்படுத்திவருகின்றன என்பது பற்றியுமே பேசினேன் ‘ என கத்தோலிக்க ஆயர்கள் சூழ்ந்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

‘ நான் எந்த உள்நாட்டு அரசியல் சக்திகளைப் பற்றியோ தலைவர்களைப் பற்றியோ’ குறிப்பிடவில்லை’ என கர்தினால் மேலும் தெளிவுபடுத்தினார்.

நேற்றையதினம் பொரளையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வொன்றில் கருத்துவெளியிட்ட கர்தினால் மல்கம் ரஞ்சித் ‘ ஈஸ்டர் தாக்குதல்களானது மதத் தீவிரவாதம் அன்றேல் மதம் மீதுள்ள அதீத பற்றினால் நடத்தப்பட்டதொன்றாக நாம் காணவில்லை. மாறாக குறித்த அரசியல் சக்திகள் தமது அதிகாரத்தை நிலையை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சியாகவே கருதுகின்றோம். ‘ எனத் தெரிவித்தார்.

அவரது கருத்துக்கள் தற்போது எதிர்க்கட்சியிலுள்ள ஒருசில தரப்பினரின் உணர்வலைகளை எதிரொலிப்பதாகக் காணப்பட்டது. தற்போதைய அரசாங்கத்திலுள்ள தரப்பினருடன் தொடர்புடைய சக்திமிக்க அரசியல் சக்திகளே இந்தக்குண்டுத்தாக்குதல்களை திட்டமிட்டதாக எதிர்க்கட்சியிலுள்ள சில தரப்புக்கள் அவ்வப்போது கருத்துக்களை வெளிப்படுத்திவந்துள்ளன.

from Economynext

கர்த்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்த கடும் தொனியிலான கருத்துக்களை கத்தோலிக்க திருச்சபை மறுதலித்த இரண்டாவது சந்தர்ப்பமாக இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பு அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல்களை நடத்திய குற்றவாளிகள் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுவருகின்ற விசாரணைகளில் போதய முன்னேற்றம் காணப்படாமை அன்றேல் விசாரணை வினைத்திறன் வீரியமாக காணப்படாமை குறித்து அண்மைக்காலமாக கர்த்தினால் விரக்தியடைந்தவராக கடுந்தொனியில் கருத்துக்களை வெளிப்படுத்திவருகின்றதைக் காணமுடிகின்றது. இம்மாத முற்பகுதியில் கோபத்துடன் கூடிய முகபாவனையோடு காணப்பட்ட கர்த்தினால் மல்கம் ரஞ்சித் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக சாடியிருந்தார். மீண்டும் அதிகாரத்தைப் பிடிப்பதற்காக தேர்தலில் போட்டியிடப்போவதாக சிறிசேன கூறியமை குறித்து கருத்துவெளியிட்டிருந்த கர்தினால் சிறிசேன ஆடையை அணிந்துகொண்டா இப்படிக் கருத்துவெளியிடுகின்றார் என்று வினவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இலங்கை கத்தோலிக்க ஆயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளரான அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ ,கர்த்தினாலின் கடுந்தொனியிலான கருத்துக்கள் எவர் மீதான தனிப்பட்டதோ அன்றேல் அரசியல் ரீதியானதான கருத்துக்கள் அல்ல என்று தெரிவித்தார். ‘ எவரையும் அரசியல் ரீதியாக தாக்கும் நோக்கத்தை கர்த்தினால் எந்தச்சந்தர்ப்பத்திலும் கொண்டிருக்கவில்லை. ஈஸ்டர் தாக்குதல்களை நாம் தேசிய பேரனர்த்தமாக நாம் கருதுகின்றோம் . அந்த தாக்குதல்கள் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்தன.அந்த அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருந்துகொண்டே உள்ளது.” என்று அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி மாதத்தில் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் கருத்துவெளியிட்டபோது ஈஸ்டர் தாக்குதல்களின் முக்கிய குற்றவாளிகள் மற்றும் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தத்தவறவினால் சர்வதேச விசாரணையைக் கோரப்போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.