இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவமாடிக்கொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் மூன்று நாட்களாக 250,000ற்கு அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த சாது கோகிலா, தனது சகோதரர் மகனுக்கு ஒக்சிஜன் சிலிண்டர் தேடி அலைந்த அனுபவத்தை ஊடகங்களிடம் பகிர்ந்தபோது உடைந்து அழுதது கர்நாடகாவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தொற்று மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதில் கர்நாடக மாநிலமும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மக்களின் கொரோனா சிகிச்சைக்கு மாநில அரசு போதிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று பிரபல இசையமைப்பாளர் குருபிரசாத், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைக் குற்றம் சாட்டி விமர்சித்தார்.
தற்போது கன்னடத் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் சாது கோகிலா, கொரோனா தொற்று அதிகம் பரவுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஊடகத்தினரிடம் பேசுகையில் உடைந்து அழ ஆரம்பித்தார் சாது கோகிலா.
‘நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் எனக்கே எனது சகோதரரின் மகனுக்காக ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்ய அதிகமாக அலைய வேண்டியிருந்தது. அது ஒரு கொடுமையான அனுபவமாக இருந்தது. இப்படியிருக்கையில் பொதுமக்களுக்கு, அவர்களின் உறவினர்களுக்கு சிகிச்சை கிடைக்க எவ்வளவு போராட வேண்டியிருக்கும் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது.
ஊடகங்களில் சொல்லப்படுவது உண்மையே. ஒக்சிஜன், மருந்துகள் படுக்கைகள் என அனைத்துக்கும் பற்றாக்குறை உள்ளது. இறந்தவர்களின் உடலைத் தகனம் செய்யக் கூட பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலை மிகவும் மோசமாக உள்ளது. இப்போது எனது சகோதரர் மகன் தேறிவிட்டாலும் அந்தக் கொடுமையான அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது’ என்று சாது கோகிலா பேசியுள்ளார்.