சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் இன்று மாலை இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
எதிர்வரும் 29ம்திகதி காலை வரை இலங்கையில் அவர் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முக்கியஸ்தர்களைச் சந்தித்துக்கலந்துரையாடவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இலங்கையில் சீனா முன்னெடுக்கும் முக்கிய திட்டங்களான கொழும்பு துறைமுக நகர் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய திட்டங்களையும் அவர் நேரில் சென்று பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2020ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் சிரேஷ்ட சீன கம்யூனியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் உயர்மட்ட வெளிவிவகார கொள்கை வகுப்பாளருமான யாங் யீசி தலைமையிலான உயர்மட்டத் தூதுக்குழு இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர் இடம்பெறும் மிக உயர்மட்ட விஜயமாக இவ்விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய கொரோனா தொற்றினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தபோது சீனா 1 பில்லியன் ( 100 கோடி) அமெரிக்க டொலர்களை கடனாகவும் 1. 5பில்லியன் ( 150கோடி) அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு நாணய கைமாற்றாகவும் வழங்கியது. இதன் மூலம் இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு அதிகரிக்க வழிகோலியது.
கடந்த மாதம் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்த சீன ஜனாதிபதி ஷீ ஜிங்பிங் நெருங்கிய ஒத்துழைப்பினூடாக கொரோனா தொற்றுக்குப் பின்னரான இலங்கையின் மீளெழுச்சிக்கு கைகொடுக்க சீனா தயாராகவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இலங்கையில் சீனாவின் உட்கட்டுமானத்திட்டங்கள் மூலமாக அதன் பிரசன்னம் மற்றும் வகிபாகம் தொடர்பாக அதிகரித்தளவிலான அவதானமும் கரிசனைகளும் எதிர்ப்புக்களும் பதிவாகிவரும் நிலையில் சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் முக்கித்துவம் பெறுகின்றது.
1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கொழும்பு துறைமுக நகர் தொடர்பான விசேட பொருளாதார வலயத்திற்கான சட்டமூலம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட சுமார் 20 மனுக்கள் மீது 05 நாட்களாக உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
இந்த சட்டமூலமானது இலங்கையில் சீனாவின் காலனிக்கு வழிகோலும் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்ற நிலையில் உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பினை பலதரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் கொழும்புத்துறைமுக நகரின் நன்மை தொடர்பாக அரசாங்க மட்டத்தில் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளதுடன் முன்னணிப்பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இணையத்தளங்களிலும் கொழும்பு துறைமுக நகருக்கு சார்பான விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.