இந்தியாவை விட இலங்கையில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகக்குழு உறுப்பினருமான டொக்டர் தணிகைவாசன் ரட்ணசிங்கம் அதிர்ச்சித்தகவலை வெளியிட்டார்.
இலங்கையில் தற்போது கொரோனா பரவல் வேகம் பிரேஸில் நாட்டை ஒத்திருப்பதை தரவுகள் உணர்த்திநிற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குளோப் தமிழுக்கு நேற்றிரவு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக அதிகரித்துவந்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை நேற்றுக்காலை வெளியிடப்பட்ட தரவுகளின் படி ஒரே நாளில் 4 லட்சத்தை தாண்டியிருந்தது.
ஆனால் இலங்கையின் நிலைமையானது இந்தியாவை விட மோசமாக இருக்கின்றதென கூறுவதற்கு சனத்தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது இலங்கையில் அதிகமாக காணப்படுகின்றதென டொக்டர் தணிகைவாசன் விளக்கமளித்தார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது.
நாளொன்றில் பதிவான அதிகமான கொரோனா நோயாளர்கள் நேற்று பதிவாகியுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நேற்று 1,716 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500ஐக் கடந்துள்ளது.
இந்த மூன்று நாட்களில் 4 ஆயிரத்து 909 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 862 ஆக உயர்வடைந்துள்ளது.
நோயாளர்களில் 96 ஆயிரத்து 478 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் 12 ஆயிரத்து 706 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.
இன்றையதினம் காலை வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கடைசி 24 மணிநேரத்தில் இந்தியாவில் 392, 488 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 3,689 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையின் கொரோனா நிலைமை பற்றிய மிக முக்கியமான மிகச் சமீபத்திய தரவுகளை அறிந்துகொள்வதற்கு டொக்டர் தணிகைவாசன் ரட்ணசிங்கத்துடனான நேர்காணலை முழுமையாகப் பாருங்கள்.