5 கோடி மக்களின் உயிரைப் பறித்த ஸ்பானிஷ் ஃப்ளூவின் திசையில் கொரோனா?

0
340
Article Top Ad

கொரோனா வைரஸ் எனப் பொதுவாக அறியப்படும் கொவிட்-19 பெருந்தொற்றுநோயின் இரண்டாவது அலை இன்று உலகில் பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்துக்கொண்டிருக்கின்றது.

மனித குல வரலாற்றிலேயே பேரழிவை ஏற்படுத்திய விஷயங்களில் முதலிடம் வகிக்கும் ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ என்ற வைரஸ் தொற்றின் இரண்டாம் அலைக்கும்,

இப்போது நாம் எதிர்கொண்டு வரும் கொரோனா இரண்டாம் அலைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்த வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள நமக்குப் பாடங்களும் இருக்கின்றன.

முதலாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த 1918 இன் தொடக்கத்திலிருந்து போர் முடிவுக்கு வந்த பிறகும் கூட ஸ்பானிஷ் ஃப்ளூ தன் கோர தாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

உலக வரைபடத்தின் மேற்கு எல்லையில் உள்ள அலாஸ்கா முதல் கிழக்கு எல்லையில் உள்ள சமோவா தீவு வரை மனிதர்கள் உள்ள எந்தப் பகுதியையும் ஸ்பானிஷ் ஃப்ளூ அன்று விட்டு வைக்கவில்லை.

50 கோடிக்கும் மேற்பட்டோருக்குத் தொற்றிய இந்த நோய், 5 கோடிக்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்தது.

அப்போதைய உலக மக்கள்தொகையில் இது 2.7 சதவீதம். இன்றைய மக்கள்தொகையில் அந்த வீதத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு எண்ணிக்கை 20.25 கோடியைத் தொடும்.

உலக அளவில் இந்தியாவில்தான் அப்போது அதிக பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவில் 1.25 கோடி பேர் உயிரிழந்தார்கள்.

இரண்டு உலகப் போர்களாலும் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட ஸ்பானிஷ் ஃப்ளூவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

நாடுகளின் எல்லைகளை இந்தப் பெருந்தொற்று இலகுவாகவே கடந்து பரவியது. இதற்குப் பிரதான காரணம், உலகப் போரால் பல இடங்களுக்கும் பல நாடுகளுக்கும் போர் வீரர்கள் இடம்பெயர்ந்ததுதான்.

அவர்கள் தங்களுடன் நோய்க் கிருமிகளையும் கொண்டு சென்றார்கள். மேலும், ‘அவ்வப்போது வரும் காய்ச்சல் போலவே இதுவும்’ என்று அலட்சியமாகக் கருதியதும் ஒரு காரணம்.

அதன் விளைவாக, ஸ்பானிஷ் ஃப்ளூ பூதாகரமாக உருவெடுத்தது.

போர்க் காலத்தில் ஊரடங்கு, தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் தங்கள் தரப்பு பலவீனமாகி விடும் என்று அஞ்சியே அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மேற்கண்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இதனால், ஸ்பானிஷ் ஃப்ளூ கட்டுக்கடங்காமல் பரவியது.

இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் எண்ணிக்கை காந்தியில் ஆரம்பித்து, டி.எஸ்.எலியட் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஃப்ரன்ஸ் காஃப்கா, டி.எச்.லோரன்ஸ், வோல்ட் டிஸ்னியை உள்ளடக்கி துருக்கியின் முதல் ஜனாதிபதி முஸ்தஃபா கெமால் அதாதுர்க் வரை நீளும்.

பிரெஞ்சுக் கவிஞர் கியோம் அப்போலினேர், லெனினின் வலக்கரமாகத் திகழ்ந்த யாக்கோவ் ஸ்வெர்த்லோவ், ஆர்தர் கோனான் டாய்லின் மகன், டொனால்ட் ட்ரம்ப்பின் பாட்டன் என்று மாண்டவர்களின் பட்டியலும் நீளம்.

ஸ்பானிஷ் ஃப்ளூவின் முதல் அலை 1918 இன் முதல் காலாண்டில் ஏற்பட்ட போது அதன் வீரியம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. தீவிரமான காய்ச்சல், பிற அசௌகரியங்கள் என்று மூன்று நாட்களுக்கு நீடித்தது.

மரணங்களும் மற்ற காய்ச்சலால் ஏற்படும் அளவே இருந்தன. இன்னும் சொல்லப் போனால் முதல் அலை ஓய்ந்ததும் ‘அவ்வளவுதான் முடிந்து விட்டது’ என்று உலகமே நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

ஆனால், 1918 ஓகஸ்ட் அளவில் அதிக வீரியம் பெற்ற வைரஸ் பரவத் தொடங்கிய போது உலகம் நடுங்கியது. வைரஸ் தொற்று ஏற்பட்டு 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அதன் வீரியம் இருந்தது.

உலகப் போரின் களத்தில் இருந்தவர்களும் அவர்களால் தொற்று ஏற்பட்ட சாதாரண மக்களும் கொத்துக்கொத்தாக மடிந்தார்கள். மிக மோசமான வலியைத் தொடர்ந்து மரணத்தை ஏற்படுத்திய நோய் அது.

 

பிரேத பரிசோதனையில், இறந்தவர்களின் நுரையீரல் நீல நிறத்திலும் திரவத்தால் நிரம்பியது போலவும் காணப்பட்டது. நீரில் மூழ்கி இறந்தால் நுரையீரல் எப்படி இருக்குமோ அப்படி இருந்திருக்கிறது.

உலகம் முழுவதும் ஒரு வைரஸ் பரவுகையில், மொத்த உலகமும் ஒரே சமூகமாக ஒன்றிணைந்து எதிர்கொள்ளாததும் நோயை எதிர்கொள்வதற்கு முன்னுரிமை

அளிக்காமல் நோய்ப் பாதிப்பை மறைப்பதை ஒரு வியூகமாக்கிப் பல அரசுகள் செயல்பட்டதுமே ஸ்பானிஷ் ஃப்ளூ அவ்வளவு பேரைச் சூறையாடக் காரணமாக அமைந்தது.

ஒரு பெருந்தொற்றுக் காலத்திலேனும் சமூகமானது ஒருமித்த சிந்தனையோடும், அரசானது சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை அளித்தும் செயல்பட வேண்டும் என்பது அன்றைய பாடமாக இருந்தது.

அவ்வளவு கொடிய கிருமியையும் கீழே தள்ளித்தான் இன்றைய இடத்துக்கு மனித குலம் வந்திருக்கிறது என்பது நமக்கான இப்போதைய நம்பிக்கை!

கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக உலகில் இதுவரை உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 3,284,409 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்திற்கு பிறகு இந்தியாவில் இரண்டாம் அலை ஆரம்பித்து ஏப்ரல் இறுதிப்பகுதி முதல் வீரியம் பெற்றுள்ளமையால் இறப்புக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலயத்தில் மாத்திரம் இந்தியாவில் 4,187 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

இப்படியே போனால் இறப்புக்களின் எண்ணிக்கை எங்கே போய் நிற்குமோ ?

ஆசைத்தம்பி