கொரோனா பெருந்தொற்றுநோய் தீவிரம் பெற்றுள்ள நிலையில் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஒரே வழியாக தடுப்பூசி ஏற்றலே அமைந்துள்ளது.
கடந்த ஜனவரி 27ம் திகதியன்று 1725 மரணங்கள் என உச்சம் பெற்றிருந்த பிரித்தானியாவில் நேற்று திங்கட்கிழமை எவ்வித மரணங்களும் பதிவாகாமல் இருந்தமைக்கு முக்கிய காரணம் தடுப்பூசி ஏற்றலாக அமைந்திருந்தது என்றால் மிகையல்ல
நேற்று ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவின் மருத்துவ ஆராச்சி நிறுவனத்தின் எதிர்வுகூறலின் படி ஜுன் மாதத்திலே நாளொன்றுக்கு 100 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழலாம் என எச்சரித்திருந்தார்.
இலங்கையில் மரணங்களின் எண்ணிக்கை ஜுன் ஜுலை மாதங்களில் பெரும் அதிகரிப்பைக் காண்பிக்கும் என எச்சரிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதற்கு முன்னர் நாட்டிலுள்ள பெருமளவானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது சாத்தியமா என்ற கேள்வி எழுகின்றது.
இலங்கையில் இதுவரை பத்துலட்சத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலானவர்களுக்கே முதற்கட்டத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இதிலே அதிக பட்சமாக அஸ்ட்ரா செனெக்கா AstraZeneca கொவிஷீல்ட் தடுப்பூசியே ஏற்றப்பட்டுள்ளது.
மே 10ம் திகதி வரை 925,242 பேருக்கு AstraZeneca அஸ்ட்ரா செனெக்கா கொவிஷீல்ட் முதற்கட்டத் தடுப்பூசி போடப்பட்டிருக்கின்றது. 196,546 பேருக்கு மாத்திரமே அஸ்ட்ரா செனெக்கா இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை காரணமாக அங்கிருந்துஅஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகள் வருவது தாமதமாகியுள்ள நிலையில் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி ஏற்றுவதற்கு 600,000 அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகள் பற்றாக்குறையாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் சீனாவின் சீனோஃபார்ம் தடுப்பூசிகள் முதற்கட்டமாக முறையே – 4381 மற்றும் ,3169 பேருக்கு மாத்திரமே மே 10 திகதிவரை ஏற்றப்பட்டிருக்கின்றது
கொவிட்-19 தடுப்பூசி ஏற்றல் விபரம் ( மே 10 வரை)
அஸ்ட்ரா செனெக்கா -925,242 ( முதற்கட்டம்) / 196,546 ( இரண்டாம் கட்டம்)
ஸ்புட்னிக்– 4381 (முதற்கட்டம்)
சீனோஃபார்ம்– 3169 (முதற்கட்டம்)
இலங்கைக்கு முதலில் வந்த அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை முதற்கட்டமாக ஏற்றியவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி ஏற்றுவதற்கு முன்னர் கூறப்பட்ட கால எல்லை கடந்து பல வாரங்களாகிவிட்டன.
இந்த நிலையில் முதற்கட்டமாக அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை ஏற்றியவர்களுக்கு இரண்டாம் கட்டமாக ஏற்றுவதற்கு அதேவகையான தடுப்பூசிபற்றாக்குறையால் நெருக்கடி நிலைக்குள்ளாகியிருக்கின்றது அரசாங்கம்.
இதனிடையே இரண்டாம் கட்டமாக எந்தவொரு தடுப்பூசியையும் பயன்படுத்த முடியும் என நிபுணர்கள் அறிவித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (11) ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
முதலாவது கட்டத்தில் ஒருவகை தடுப்பூசியையும் இரண்டாம் கட்டத்தில் மற்றுமொரு வகையை சேர்ந்த தடுப்பூசியையும் பயன்படுத்த முடியும் என துறைசார் விசேட நிபுணர்கள் அறிவித்துள்ளாக அமைச்சர் இதன்போது கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள வைத்தியர்களும் இறுதி தீர்மானத்தை மேற்கொள்வார்கள் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இதனால், முதலாம் கட்டத்தில் அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்கள், இரண்டாம் கட்ட தடுப்பூசி தொடர்பில் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் தௌிவுபடுத்தினார்.
உதய கம்மன்பில என்ற அரசியல்வாதியின் கடந்த கால வரலாற்றை அறிந்தவர்கள் அவர் கூறுவதை நம்பமுடியுமா ? என்று எழுப்பும் சந்தேகங்கள் வலுவானவை.
சமீபத்தில் டுவிட்டரில் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு துறை மருத்துவ பீட பேராசிரியரும் கொவிட்-19 வைரஸ் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளவருமான
விசேட மருத்துவ நிபுணர் நீலிகா மாளவிகே தடுப்பூசிகளைக் கலந்து பாவிப்பது தொடர்பான மருத்துவக் கட்டுரையைப் பகிர்ந்திருந்தார்.
அப்போது அந்தக்கட்டுரையில் முதற்கட்டமாக ஒரு தடுப்பூசியையும் இரண்டாம் கட்டமாக வேறொரு தடுப்பூசியையும் மாறி மாறி பயன்படுத்த முடியும் எனக் கூறப்பட்டிருக்கின்றதே இதுபற்றி உங்கள் நிலைப்பாடு என்ன எனக் கேள்வி எழுப்பியிருந்தேன் .
அதற்கு அவர் அப்படி தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது சாத்தியம் என்பதே தனது விஞ்ஞானபூர்வமான கருத்து எனவும் இது சில தடுப்பூசிகளுக்கு பொருந்தும் என்றும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து எந்த தடுப்பூசிகளை ( இவ்வாறு கலந்து பயன்படுத்தலாம்) என ஊடகவியலாளர் ரங்க சிறிலால் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தக் கட்டுரையின் பிரகாரம் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவதற்கு ( முதற்கட்டமாக ஒருவகை இரண்டாம் கட்டமாக வேறுவகை) சுகாதார நிபுணர்கள் மத்தியில் பொதுவான இணக்கப்பாடு காணப்படுகின்றது.
ஆனால் இதுதொடர்பான மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
kSiJxjlnwqhUZrO
OfyYFwPL
Comments are closed.