இலங்கையில் கிராம சேவகர் பிரிவுகளை முடக்குவதால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவோ, பொருளாதார நடவடிக்கைகளைப் பாதுகாக்கவோ முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்துவ நிபுணர்கள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையில் மட்டுமல்ல உடனடியாக மாவட்டங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளையும் விதிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறித்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையின் கொரோனாத் தடுப்பு மூலோபாயங்களை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டிய கட்டத்தை அடைந்துள்ளது எனவும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தேவையான முன்னேற்பாடுகளை எடுக்கத் தவறும் போது, நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்றும், எதிர்வரும் வாரங்களில் ஒரே நாளில் 10 ஆயிரம் நோயாளர்கள் பதிவாகக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது எனவும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மருத்துவ நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.