உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்ட கருத்து, குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுப்பதைத் தாமதப்படுத்தும் என்று பிரதான எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் எந்தவொரு நபருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய சாட்சியங்கள் இல்லை என்று சட்டமா அதிபர் மறைமுகமாகக் கூறியுள்ளார்.
தேசிய புலனாய்வுத் துறை பணிப்பாளருக்கு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முன்னறிவிப்பு கிடைத்தும், அதனை யாருக்கும் வெளிப்படுத்தவில்லை என்று ஜனாதிபதி அறிக்கையில் காணப்படுகின்றது. அது தெளிவான சாட்சியமில்லையா?
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் பல்வேறு சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டிருப்பதை சிறு பிள்ளைகளும் விளங்கிக்கொள்வார்கள்.
தேசிய புலனாய்வுப் பிரிவிலுள்ள அனைவரும் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டனர் என்று நான் கூறவில்லை. அந்தப் பிரிவில் 90 வீதமானோர் குற்றமற்றவர்கள்” – என்றார்.