உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் பெரும் சதி ? – சட்டமா அதிபர் வெளியிட்ட தகவல்

0
379
Article Top Ad

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால்  ஒரு பெரிய சதி உள்ளது என சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

எனவே 2019 ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பாக ஒரு முடிவை எட்டுவதற்கு முன்னர் சாட்சியங்கள் மற்றும் புலனாய்வு பிரிவின் தகவல்கள் சரியான முறையில் மதிப்பாய்வு செய்ய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நேரங்கள், இலக்குகள், இடங்கள், தாக்குதல்களின் முறை மற்றும் பிற தகவல்களுடன் அரச புலனாய்வு துறையின் தகவல்கள் ஒரு பெரிய சதித்திட்டம் இருந்ததற்கான சான்றாக இருப்பதாக கூறினார்.

தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த பெரும் சதியில் ஈடுபட்டவர்களின் அடையாளங்கள் ஆதாரங்களின் மூலம் வெளிக்கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நௌபர் மௌலவி என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்து தொடர்பாக பேசிய அவர், தாக்குதல்களை நடத்துவதற்கான சதித்திட்டத்தில் நௌபர் மௌலவி ஒரு முக்கிய நபராக இருந்தாலும் அவர் சூத்திரதாரி என்பதை உறுதிப்படுத்த முடியாது என சட்டமா அதிபர் தெரிவித்தார்.